Published : 07 Mar 2024 05:45 AM
Last Updated : 07 Mar 2024 05:45 AM

பிரதமர் மோடியின் நிர்வாக செயல்பாட்டுக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு

பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமராக மோடியின் செயல்பாடு தொடர்பான ஆய்வை இப்சாஸ் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 75 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 65 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

பிரதமர் மோடிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் மோடியின் செயல்பாடு மீதான ஆதரவு 60 சதவீதமாகவும், 2023 பிப்ரவரியில் 67 சதவீதமாகவும் செப்டம்பரில் 65சதவீதமாக இருந்தது. இந்நிலையில், தற்போது அது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வட மண்டலத்தில் ஆதரவு 92 சதவீதமாக உள்ளது.

கிழக்கு மண்டலத்தில் ஆதரவு 84 சதவீதமாகவும், மேற்கு மண்டலத்தில் 80 சதவீதமாகவும் உள்ளது.தென்மண்டலத்தில் 35 சதவீதமக்களே மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வயதின் அடிப்படையில் பார்க்கையில், 45 வயதுக்கு மேற்பட்டோரில் 79 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார். துறைவாரியாக எடுத்துக்கொண்டால், கல்வி துறை சார்ந்து மோடியின் செயல்பாடுகளுக்கு 76 சதவீதமும், தூய்மைப் பணிகளுக்கு 67 சதவீதமும், சுகாதார செயல்பாடுகளுக்கு 64 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஊழல் ஒழிப்பு (42 சதவீதம்), வேலையின்மை (43 சதவீதம்), பணவீக்கம் (44 சதவீதம்) உள்ளிட்டவற்றுக்கு குறைந்த ஆதரவு பதிவாகியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு, ஜி20 உச்சி மாநாடு ஆகியவை மோடி மீதான மக்களின் ஆதரவை அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x