Last Updated : 03 Feb, 2018 12:43 PM

 

Published : 03 Feb 2018 12:43 PM
Last Updated : 03 Feb 2018 12:43 PM

பணமில்லா திட்டம், நூல் இல்லா பட்டத்துக்கு சமம்: மோடி அரசின் சுகாதார திட்டம் குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

பணம் இல்லா திட்டம் என்பது நூல் இல்லாத பட்டத்துக்கு சமம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதார திட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

அப்போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பேசுகையில், "இந்த ஆண்டில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் 50 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும், ஒவ்வொருவரும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு பெறலாம் இந்த திட்டத்துக்கான நிதி எதிர்காலத்தில் திரட்டப்படும்" என ஜேட்லி அறிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

50 கோடி மக்கள் பயன் அடையும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. திட்டத்துக்கு பணம் எங்கிருந்து வரும் எனக் கேட்டால், எதிர்காலத்தில் திரட்டப்படும் என நிதி அமைச்சர் அறிவிக்கிறார்.

பணம் இல்லா திட்டம் என்பது, நூல் இல்லா பட்டத்தை வானத்தில் பறக்கவிடுவது போன்றதாகும். பட்டம் விடுபவர் வேண்டுமானாலும் பட்டம் பறக்கிறது எனச் சொல்லலாம். ஆனால், பட்டமும் இருக்காது, பட்டமும் பறக்காது.

எதிர்காலத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்துக்கு பணம் திரட்டப்படும் எனக் கூறுவது என்பது வெற்றுவார்த்தை. வார்த்தை ஜாலம். இந்த திட்டத்துக்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்யவே இல்லை.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி:

மும்பை பங்குச்சந்தையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சென்செக்ஸ் 830 புள்ளிகளுக்கு மேல் அடிவாங்கியது. முதலீட்டாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.4 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "நாட்டின் பங்குச்சந்தை மோடியின் பட்ஜெட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதனால், 800 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ந்துவிட்டது" எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x