Published : 27 Feb 2024 12:22 AM
Last Updated : 27 Feb 2024 12:22 AM

வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் 75% பதிவு: ஆய்வுத் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதமும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் பேச்சு 25 சதவீதமும் இதில் அடங்கும்.

கடந்த 2023-ல் மட்டும் இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘இந்தியா ஹேட் லேப்’ எனும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் இது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் 223 மற்றும் பிற்பாதியில் 413 என வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் தகவல்.

இதில் 498 சம்பவங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் இதன் பங்கு 75 சதவீதமாகும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதம் ஒட்டுமொத்தமாக பதிவாகி உள்ளது. ஜிஹாத் போன்றவற்றை முன்வைத்து 63 சதவீத சம்பவங்களும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் வகையிலான பேச்சு 25 சதவீதமும் பதிவாகியுள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் வெறுப்புப் பேச்சு அதிகரித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரா (118), உத்தர பிரதேசம் (104), மத்திய பிரதேசம் (65), ராஜஸ்தான் (64), ஹரியாணா (48), உத்தராகண்ட் (41), கர்நாடகா (40), குஜராத் (31), சத்தீஸ்கர் (21) மற்றும் பிஹார் (18) மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அரங்கேறும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளன.

பாஜக ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதை ஒப்பிட்டு பார்த்ததில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்தும் வெறுப்பை பரப்பும் பேச்சுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் 78 சதவீதம் அரங்கேறி உள்ளன. இதில் பாஜக பிரமுகர்கள்/பிரதிநிதிகளின் பங்கு 10.6 சதவீதம். அதுவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அக்கட்சியின் பிரமுகர்கள்/பிரதிநிதிகள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 27.6 சதவீதம் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பு ரீதியாக வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சங் பரிவார், கோ ரக்‌ஷா தளம் உள்ளிட்ட அமைப்புகள் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ நிதிஷ் ராணா, ஏஹெச்பி தலைவர் பிரவீன், வலதுசாரி ஆதரவாளர் கஜல் சிங்காலா, சுரேஷ் ஷவாங்கே, யதி நரசிங்கானந்த், காளிசரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகிய 8 பேர் வெறுப்பை பரப்பும் வகையில் பேசுவதில் முதல் 8 இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இஸ்ரேல் - காசா இடையிலான போர், நூ (ஹரியாணா) வன்முறை சம்பவம் போன்றவற்றை முன்வைத்தும் வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சை பரப்புவதில் புதியவர்களும் ஆர்வம் காட்டி வருவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x