Published : 26 Feb 2024 10:35 PM
Last Updated : 26 Feb 2024 10:35 PM

‘ஆந்திர அணியில் விளையாடப் போவதில்லை’ - ஹனுமா விஹாரி | அரசியல் தலையீடு என புகார்

ஹனுமா விஹாரி

இந்தூர்: ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுப்பதாக சமூக வலைதளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

நடப்பு ரஞ்சி கோப்பை சீசனின் காலிறுதிப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்களில் தோல்வியை தழுவியது ஆந்திரா. இந்நிலையில், இந்த அறிவிப்பை விஹாரி அறிவித்துள்ளார். நடப்பு சீசனுக்கான ஆந்திர அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இருந்தும் முதல் போட்டிக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

“சில உண்மையை சொல் வேண்டியுள்ள காரணத்துக்காக நான் இந்த பதிவை பதிவிட்டுள்ளேன். நடப்பு சீசனில் வங்காள அணிக்கு எதிரான முதல் போட்டியில் நான் தான் ஆந்திராவின் கேப்டன். அப்போது அணியின் 17-வது வீரரிடம் நான் சத்தம் போட்டேன். அவரது தந்தை அரசியல் பிரமுகர். இந்த விவகாரம் குறித்து அந்த வீரர் அவரது தந்தையின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். உடனடியாக அந்த அரசியல் பிரமுகரும் என் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

வங்காள அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்ற நிலையில், என் மீது தவறு ஏதும் இல்லாத சூழலில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டேன். தனிப்பட்ட முறையில் நான் அந்த வீரரை எதுவும் சொல்லவில்லை. ஆனால், ஆந்திர கிரிக்கெட் நிர்வாகத்துக்கு இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய, கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ஆந்திர அணியை நாக்-அவுட் சுற்றுக்கு அழைத்து சென்ற, கடந்த சீசனில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் களத்தில் அணிக்காக இடது கையால் பேட் செய்த வீரரை விட அந்த வீரர் தான் முக்கியம் என கருதி உள்ளது.

அது எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனால், அணிக்காக வேண்டி நான் தொடர்ந்து சீசனில் விளையாடினேன். அணி நிர்வாகம் நினைப்பதை தான் வீரர்கள் செய்ய வேண்டும் என விரும்புவது வருத்தம். அவர்களால் தான் அணியில் வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக கருதுகிறார்கள். இதை இது நாள் வரையில் நான் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். எனது சுயத்தை இழந்து நான் ஆந்திர அணியில் விளையாட விரும்பவில்லை” என விஹாரி தெரிவித்துள்ளார்.

அந்த வீரர் யார் என்பதை விஹாரி தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் ஆந்திர அணியை சேர்ந்த பிருத்விராஜ் எனும் வீரர், ‘அது நான்தான்’ என தெரிவித்துள்ளார். இந்த பதிவின் மூலம் அனுதாபம் ஈட்ட முயற்சிக்கிறார். அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை அணி வீரர்கள் அனைவரும் அறிவார்கள் என தெரிவித்துள்ளார்.

— Hanuma vihari (@Hanumavihari) February 26, 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x