Last Updated : 26 Feb, 2024 08:40 AM

8  

Published : 26 Feb 2024 08:40 AM
Last Updated : 26 Feb 2024 08:40 AM

“தமிழகத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதம் கிட்டும்” - பிரசாந்த் கிஷோர் கணிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இதில், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் முதன்முதலாக வியூகம் அமைத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர், முதன்முதலில் குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி தொடர பாஜகவுக்காக வியூகம் அமைத்தார். இதில் வெற்றிபெற்ற பாஜக, 2014 மக்களவை தேர்தலிலும் பிரசாந்தே வைத்தே வியூகம் அமைத்தது. இவரது வியூகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலன் அளித்ததாகக் கருதப்பட்டது. பிறகு பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிக்கும் பிரசாந்த் வியூகம் அமைத்து உதவி இருந்தார். கடைசியாக, தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு வியூகம் அமைத்தார்.

இச்சூழலில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்துகொண்டார் பிரசாந்த். அதில் அவர், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தேசிய அரசியலில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பிரசாந்த் மேலும் கூறுகையில், ‘‘தென்னிந்திய மாநிலங்களில் வரும் தேர்தலில் பாஜக கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும். தமிழகத்திலும் அதற்கு வியப்பிற்குரிய வகையில் இரண்டு இலக்க வாக்கு சதவிகிதம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது, எட்டு முதல் 12 சதவிதத்திற்கு இடையில் இருக்கும். இதில், வெற்றித் தொகுதிகள் எத்தனை இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. இதுவரையும் பாஜகவுக்கு ஐந்து சதவிகித வரை மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன.’’ எனத் தெரிவித்துள்ளார்.

2021 இல் திமுகவிற்கு தமிழகத்தில் பணியாற்றிய அனுபவத்தில் அடிப்படையில் வியூக நிபுணரான பிரசாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால், குறிப்பிட்டு அவர் எந்த தொகுதிகளையும் தெரிவிக்கவில்லை. எனினும், பிரசாந்த் குறிப்பிடும் இரட்டை இலக்க சதவிதத்தில் முக்கியமாக கொங்கு மண்டலம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, இப்பகுதியில் கணிசமான செல்வாக்கு தனக்கு இருப்பதாக பாஜக நம்புகிறது.

இதை மனதில் வைத்தே கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனனுக்கு ஜார்கண்டின் ஆளுநர் பதவி அளிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர், கடந்த ஆண்டுகளில் பாஜகவுக்காக கோயம்புத்தூர் மக்களவை தொகுதியின் எம்பியாக 1998 மற்றும் 1999 என இரண்டு முறை வென்றவர். தொடர்ந்து மூன்றுமுறை பாஜகவுக்காக போட்டியிட்டு சிபிஆர் தோல்வியும் அடைந்தார். 2014 மக்களவை தேர்தலில் பாஜக, கன்னியாகுமரி மட்டுமே வென்றது. 2019ல் பாஜகவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு நான்கு தொகுதிகள் கிடைத்தன. அந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் ஆளும் அதிமுக கூட்டணி வைத்திருந்தது. இம்முறை அக்கட்சி பாஜகவிடமிருந்து விலகி நிற்கிறது. தற்போது, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு முயலும் பாஜக, தமிழகத்தில் மீண்டும் கால்பதிக்க தீவிரம் காட்டுகிறது.

பிரதமரின் தமிழகப் பயணம்: இப்படியான நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி இதுவரை இல்லாத வகையில் தமிழகத்துக்கு பயணிக்க உள்ளார். நாளை (பிப்.27ல்) கூட பிரதமர் பல்லடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையை முடித்து வைக்கிறார்.

தெலங்கானா, மேற்குவங்க மாநிலங்கள்: திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் எனவும் பிரசாந்த் கணித்துள்ளார். 2019 தேர்தலில் 18 எம்பிக்களை , கொண்ட பாஜகவிற்கு இந்தமுறை கூடுதலாகக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய சட்டசபை தேர்தலில் தெலங்கானா மாநிலம் காங்கிரஸ் வசமானது. தெலங்கானாவில் பாஜக 14 சதவிகித வாக்குகளை பெற்றது. வரும் தேர்தலில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் எனவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணி: இண்டியா கூட்டணியை பற்றியும் கருத்து கூறிய பிரசாந்த், ‘‘தற்போது இண்டியா பணியாற்றிவது போல் கடந்த வருடமே செய்திருக்க வேண்டும்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார். 2014 மக்களவை தேர்தலில் பாஜக எண்ணுவது போல் அக்கட்சிக்கு 370 தொகுதிகள் கிடைக்கும் என்பதிலும் பிரசாந்த் ஐயம் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x