Published : 26 Feb 2024 08:15 AM
Last Updated : 26 Feb 2024 08:15 AM

ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் - தமிழ்நாட்டில் 33 ரயில் நிலையங்கள் மேம்பாடு

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். சில ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

அம்ருத் பாரத் ரயில் நிலையம்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அம்ருத் பாரத் ரயில் நிலையதிட்டத்தின் இரண்டாம் கட்டமாக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 553 நிலையங்களை ரூ.19,000 கோடி செலவில் மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 33 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.

சென்னை, சேலம்: சென்னை கோட்டத்தில் சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் ஈரோடு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், பொம்மிடி, திருப்பத்தூர், சின்ன சேலம், நாமக்கல், கோவை வடக்கு ஆகிய ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் திருவண்ணாமலை, திருவாரூர், விருத்தாசலம், கும்ப கோணம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

மதுரை கோட்டம்: மதுரை கோட்டத்தில் பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி ரயில் நிலையங்கள், பாலக்கோடு கோட்டத்தில் பொள்ளாச்சி என தமிழ்நாடு முழுவதும் 33 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் புதுச்சேரியில் மாஹி ரயில் நிலையமும் மறுசீரமைக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 1,500 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனைபிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.21,520 கோடியாகும். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ரூ.41,000 கோடி மதிப்பில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். சில ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி இன்றுதொடங்கி வைக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x