Published : 03 Feb 2018 09:09 AM
Last Updated : 03 Feb 2018 09:09 AM

உ.பி. மாநிலம் காஸ்கஞ்ச் பகுதி கலவர விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பிய சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

அவை அலுவல்கள் தொடங் கிய சில நிமிடங்களிலேயே, காஸ்கஞ்ச் கலவர விவகாரத்தை சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, “காஸ்கஞ்ச் பகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக பெரிய அளவில் அராஜகங்கள் நடைபெற்று வருகின்றன. சிறுபான்மையின சமூக மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது” எனக் கூறினார். அவருக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குரல் எழுப்பினர். மேலும், காஸ்கஞ்ச் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் நோட்டீஸ் அளித்துவிட்டு பேசுமாறு கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த சமாஜ்வாதி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆம் ஆத்மி உறுப்பினர்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பி.ஜே. குரியன் பலமுறை கேட்டுக்கொண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்பாததால், அவையை மதியம் வரை அவர் ஒத்திவைத்தார்.

மதியத்திற்கு பின்னர் அவை மீண்டும் கூடியதும், கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, டெல்லியில் சாலையோரக் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் கோஷமிட்டனர். அவர்களுடன் இணைந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். எனினும், அமளிக்கு மத்தியிலும் கேள்வி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக, இந்த அமளி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் காங்கிரஸ் எம்.பி. ராமசந்திர ராவ் ‘ஆந்திராவுக்கு உதவுங்கள்’ என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு அவையின் மையப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சல் அடைந்த பி.ஜே. குரியன், அவரை கடுமையாக வசைபாடினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x