Published : 17 Feb 2018 06:29 PM
Last Updated : 17 Feb 2018 06:29 PM

நாட்டை திவாலாக்க நிரவ் மோடியை ரிசர்வ் வங்கியின் கவர்னராக்கி விடுங்கள்: சிவசேனா தாக்கு

 நாட்டை திவாலாக்க நிரவ் மோடியை ரிசர்வ் வங்கியின் கவர்னராக மத்தியில் ஆளும் பாஜக அரசு நியமிக்கும் என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னா-வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

''பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1,400 கோடி மோசடி செய்துவிட்டு, வைர வியாபாரி நிரவ் மோடியும் அவர்களின் குடும்பத்தாரும் கடந்த மாதமே நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எழுவதற்கு முன் நிரவ் மோடி, சுவிட்சர்லாந்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

தேர்தலின்போது, பாஜகவுக்கு நிதி திரட்டிக் கொடுத்ததில் முக்கிய அனுதாபியாக நிரவ் மோடி இருந்துள்ளார். பாஜக கட்சித் தலைவர்களின் ஆசியுடன் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்து, அதில் ஒரு பகுதியை அரசின் கஜானாவுக்கு நிரவ் மோடி கடத்தியுள்ளார்.

பாஜகவின் செல்வச் செழிப்புக்கும், நிதி குவிந்ததற்கும், நிரவ் மோடியின் செயல்பாடுகளும், நிதி அளித்ததும் காரணமாக இருந்திருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்கெனவே நிரவ் மோடி மீது சிபிஐ அமைப்பிடம் புகார் தெரிவித்துவிட்டதா? அல்லது பிரதமர் மோடியை டாவோஸ் மாநாட்டில் சந்தித்துவிட்ட வந்த பின் புகார் தெரிவித்ததா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு சாதாரண மனிதன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றாலோ அல்லது, பிணத்தை எரியூட்டச் சென்றாலோ ஆதார் கார்டு கேட்கிறார்கள். ஆனால், ஆதார் கார்டு இல்லாமல் நிரவ் மோடிக்கு ரூ.1400 கோடியை எப்படி பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் கொடுத்தது?

லலித் மோடி, விஜய் மல்லையா மோசடிகள் செய்து நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது ஏராளமான சொத்துகளை விட்டுச் சென்றார்கள். ஆனால், நிரவ் மோடியோ ரூ.5100 கோடிக்கு மட்டுமே தனது நகைக்கடைகளில் நகைகளையும், வைரங்களையும் விட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் ஏராளமான தொழிலதிபர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் செய்த ஊழல் அற்ற அரசு, வெளிப்படைத்தன்மையான அரசை ஏற்படுத்துவோம் என்பதற்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக கூறிவந்ததை இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் உடைத்துவிட்டன.

100 ரூபாய், 500 ரூபாய் கடனைக் திருப்பிச் செலுத்த முடியாத ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அவர்களின் நிலம் வங்கிகளால் பறிக்கப்படுகிறது.

ஆனால், பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ரூ.15ஆயிரம் கோடி கடன் பெற்று, சுதந்திரமாக நாட்டை விட்டுச் செல்கிறார்கள். அவர்களை அரசே வழி அனுப்பி வைக்கிறது.

நாட்டின் தோற்றத்தை உலக அளவில் சிறப்பாக வெளிப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை விளம்பரத்துக்காக பாஜக அரசு செலவு செய்கிறது. ஆனால், ரகுராம் ராஜன் போன்ற சிறந்த ரிசர்வ் வங்கி கவர்னர், நாட்டில் கொள்ளை நடக்கிறது என்று பேசினால், அவரை வெளியே துரத்திவிடுவீர்கள்.

நாட்டை திவாலாக்க ரிசர்வ் வங்கி கவர்னராக நிரவ் மோடியை மத்திய அரசு நியமித்தால் நாடு திவாலாகி விடும்.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x