Published : 17 Feb 2024 06:59 AM
Last Updated : 17 Feb 2024 06:59 AM

விவசாயிகளுடன் நாளை 4-ம் கட்ட பேச்சு: டெல்லி பேரணி 2 நாட்கள் நிறுத்தி வைப்பு

புதுடெல்லி: விவசாயிகள் சங்கத்தினர் - மத்திய அமைச்சர்கள் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்றும், 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,சாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், வேளாண்கடன் தள்ளுபடி, கட்டண உயர்வுஇல்லா மின்சாரம், லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்துசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இருந்து டிராக்டர்களில் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டனர்.

இவர்களை பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைகளில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இவர்கள் டெல்லியில் நுழைவதை தடுக்கும் வகையில் எல்லையில் தடுப்புகள் மற்றும் முள் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பஞ்சாப் - ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் டிராக்டர்களுடன் முகாமிட்டுள்ளனர்.

விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8 மற்றும்12-ம் தேதிகளில் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பின் பேட்டியளித்த மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா, ‘‘விவசாயிகள் சங்கத்தினருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நாளை மாலை 6 மணிக்கு தொடரும். அப்போது அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்’’ என்றார். அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை நடந்ததாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

சாதகமான முடிவு: விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தர் கூறுகையில், ‘‘விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம். இதற்கு நேரம் வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனால் டெல்லி செல்லும் பேரணியை 2 நாள் நிறுத்தி வைக்கிறோம். சாதகமான முடிவுகள் வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால், டெல்லி செல்லும் எங்கள் பேரணி தொடரும்’’ என்றார்.

பந்த் பாதுகாப்பு: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்த, சம்யுக்தா கிசான் மோர்சா என்ற அமைப்பு நேற்று பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. டெல்லி மற்றும் ஹரியாணா இடையே சிங்கு மற்றும் டிக்ரி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன. பலஅடுக்குகளில் தடுப்புகளும், முள்வேலிகளும் அமைக்கப்பட்டி ருந்தன. டிரோன்கள் மூலம் டெல்லி போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x