

மக்களவையில் எல்.முருகனை சாடிய டி.ஆர்.பாலு - சர்ச்சையும் கொந்தளிப்பும்: வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக சார்பில் பேசிய டி.ஆர்.பாலு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளிக்க முற்பட்டார். அதற்கு டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். அமருங்கள். நீங்கள் எம்.பி.யாக தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர்” என்று ஆவேசமாகப் பேசினார்.
உடனே குறுக்கிட்ட மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் பேசுகையில், “எங்கள் அமைச்சரை தகுதியற்றவர் என்று நீங்கள் கூற முடியாது. உடனடியாக மன்னிப்பு கோருங்கள். அவைக் குறிப்பில் இருந்து டி.ஆர்.பாலுவின் வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எழும்பி, “நீங்கள் எப்படி அமைச்சரை தகுதியற்றவர் என்று சொல்ல முடியும்? திமுக அரசுதான் தகுதியற்ற அரசு. காங்கிரஸ் தகுதியற்றது. ஒரு பட்டியலின அமைச்சரை தகுதியற்றவர் என்று கூறியதன் மூலம் ஒட்டுமொத்த பட்டியலின மக்களையே நீங்கள் அவமதித்துவிட்டீர்கள்” என்றார்.
இதன் நிமித்தமாக மக்களவையில் சலசலப்பு எழ, சபாநாயகர் ஓம் பிர்லா, டி.ஆர்.பாலுவின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்து திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெள்ள நிவாரண விவகாரம்: திமுக vs பாஜக எம்.பி.க்கள்: தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக மக்களவையில் திமுக குற்றம் சாட்டியதை அடுத்து, திமுக - பாஜக எம்பி.க்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய திமுக எம்பி ஆ. ராசா, “தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக பல முறை கேள்வி எழுப்பியும் அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது” என விமர்சித்தார்.
அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், “மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள நிதி ரூ. 2,013 கோடியை மாநில அரசு பயன்படுத்தி இருக்கிறது” என்றார்.
“திமுகவின் போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பம்” - எல்.முருகன்: “பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. சமூக நீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் திமுகவின் முகமூடியை, வருகின்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை” என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலடி தந்துள்ளார்.
டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை: “நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனைப் பார்த்து ‘அன்ஃபிட்’ என்று கூறுகிறார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு. பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? எல்.முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள், எல்.முருகனுடைய சமுதாயம் குறித்து தவறாக பேசியிருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசியுள்ளார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.
“கேரள அரசின் உறுதிக்கு முழு ஆதரவு” - முதல்வர் ஸ்டாலின்: மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கிறது திமுக அரசு: இபிஎஸ்: "மறுசீரமைப்பு, செலவுகளை சிக்கனப்படுத்துதல் மற்றும் மனித சக்தியை ஒழுங்குபடுத்துதல் என்கிற போர்வையில், மின் வாரியத்தை பல கூறுகளாகத் துண்டாடி, படிப்படியாக மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் எண்ணத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
லிவ்-இன் உறவும், உத்தாரகண்ட் பொது சிவில் சட்டமும்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் ஒரு மாதத்துக்குள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும். செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை’ என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமானதாகக் கருதப்படும்; என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமலாக்கத்துறை அச்சுறுத்தல்களுக்கு பயப்படமாட்டோம்” - ஆம் ஆத்மி: “கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் வீடுகளில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்ற முடியவில்லை. இந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று டெல்லி பொதுப் பணித் துறை அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.
முன்னதாக, டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் என 12 இடங்களில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இண்டியா கூட்டணி: ராகுல் காந்தி விளக்கம்: இண்டியா கூட்டணியை விட்டு பல்வேறு கட்சிகள் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “மம்தா பானர்ஜியின் அறிக்கைகளை நீங்கள் பார்த்தீர்களானால், அவர் இண்டியா கூட்டணிக்கு மிக முக்கியமானவராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இண்டியா கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், பாஜக அணிக்குச் சென்றுவிட்டார் என்பது உண்மைதான். அவர் ஏன் அங்கு சென்றார் என்பதை நீங்களும்கூட யூகிக்க முடியும். அவர் எங்களோடு இல்லை என்றாலும், பிஹாரில் இண்டியா கூட்டணி போட்டியிடும். நிதிஷ் குமார் வெளியேறியதை வைத்து இண்டியா கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள், தற்போது கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.