Published : 06 Feb 2024 04:29 PM
Last Updated : 06 Feb 2024 04:29 PM

“குறுக்கிடாதீர்கள்... நீங்கள் தகுதியற்றவர்...” - எல்.முருகனை சாடிய டி.ஆர்.பாலுவும், பாஜக கொந்தளிப்பும் @ மக்களவை

புதுடெல்லி: மத்திய இணையமைச்சர் எல்.முருகனைப் பார்த்து “நீங்கள் எம்.பி. பதவிக்கும், அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர்” என்று திமுக எம்.பி. டிஆர் பாலு மக்களவையில் பேசியது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் நிமித்தமாக பாஜகவினர் மக்களவையில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கமான அலுவல்கள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் சற்றே ஆரவாரம் இல்லாமல் நடந்துவந்த இந்தக் கூட்டத் தொடரில் இன்று (பிப்.6) திமுக - பாஜக வாக்குவாதத்தால் அனல் பறந்தது. வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாஜக - திமுக எம்.பி.க்கள் இடையே கடும் வார்த்தைப் போர் வலுத்தது. அவையில் நடந்தவற்றின் தொகுப்பு வருமாறு:

காரணம் என்ன? - தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக மக்களவையில் திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது பாஜக எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் குறுக்கிட்ட முயன்றார். அதற்கு டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். அமருங்கள். நீங்கள் எம்.பி.யாக தகுதியற்றவர். அமைச்சராக இருக்கத் தகுதியில்லாதவர்” என்று ஆவேசமாகப் பேசினார். அவருடைய இந்த ஆவேச வார்த்தைகள் ஆளுங்கட்சியினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் வாக்குவாதம், மன்னிப்பு கேளுங்கள் என்ற கோஷம், வெளிநடப்பு என அவையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சில கேள்விகள்; வலுத்த வார்த்தைப் போர்: மக்களவை கேள்வி நேரத்தின்போது திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், “கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே ஏற்பட்ட இன்னொரு புயலால் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மாநில அரசுப் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்தனர். உள்துறை அமைச்சரையும் சந்தித்து மாநிலத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்கும்படி வேண்டினர். அமைச்சர்கள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து ஓர் அறிக்கையையும் சமர்ப்பிப்பது. ஆனால் எப்போது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து எந்த ஒரு தகவல் தெரிவிக்கப்படவில்லை. முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், கர்நாடகாவுக்கு கொடுத்ததுபோல் எங்களுக்கும் நிவாரணம் கொடுக்கப்படுமா?” என்று வினவினார்.

அதற்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், “மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள நிதி ரூ.2,013 கோடியை மாநில அரசு பயன்படுத்தி இருக்கிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்புக்கு மத்திய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கி உள்ளது. 2010-15-ல் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.33,591 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2015-20-ல் இது ரூ.61,220 கோடியாக உயர்த்தப்பட்டது. 2021-26-ல் இது ரூ.1.38 லட்சம் கோடியாக உயர்த்தப்பட உள்ளது” என விளக்கம் அளித்தார்.

அதற்கு பதிலளித்த ஆ.ராசா, “தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக பல முறை கேள்வி எழுப்பியும் அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், ”பிப்பர்ஜாய் புயல் தாக்கியபோது குஜராத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. ஆனால் சென்னைக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எதிராக எந்தப் பாகுபாடும் இல்லை. போட்டித் தேர்வுகளைக் கூட பிராந்திய மொழிகளில் எழுத இந்த அரசு அனுமதித்துள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், “அமைச்சரின் பிரச்சினை என்னவென்றால். அவர் தமிழகத்தை இரக்கத்தோடு பார்க்க மறுக்கிறார். இதேபோல் தமிழ்நாட்டின் மீது பாரபட்சம் காட்டினால் வரும் தேர்தலிலும் அங்கே பாஜக பிரகாசிக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து திமுக சார்பில் பேசிய டி.ஆர்.பாலு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளிக்க முற்பட்டார். அதற்கு டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். அமருங்கள். நீங்கள் எம்.பி.யாக தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர்” என்று ஆவேசமாகப் பேசினார்.

உடனே குறுக்கிட்ட மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் பேசுகையில், “எங்கள் அமைச்சரை தகுதியற்றவர் என்று நீங்கள் கூற முடியாது. உடனடியாக மன்னிப்பு கோருங்கள். அவைக் குறிப்பில் இருந்து டி.ஆர்.பாலுவின் வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எழும்பி, “நீங்கள் எப்படி அமைச்சரை தகுதியற்றவர் என்று சொல்ல முடியும்? திமுக அரசுதான் தகுதியற்ற அரசு. காங்கிரஸ் தகுதியற்றது. ஒரு பட்டியலின அமைச்சரை தகுதியற்றவர் என்று கூறியதன் மூலம் ஒட்டுமொத்த பட்டியலின மக்களையே நீங்கள் அவமதித்துவிட்டீர்கள்” என்றார்.

இதன் நிமித்தமாக மக்களவையில் சலசலப்பு எழ, சபாநாயகர் ஓம் பிர்லா, டி.ஆர்.பாலுவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்து திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

டி.ஆர்.பாலு விளக்கம்: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “வெள்ள நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். சம்பந்தமில்லாத அமைச்சரான முருகன் எழுந்து பதில் அளித்தார். அதோடு, தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பேசும்போது, எங்கள் பேச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு முருகன் செயல்பட்டார். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது; ஓரவஞ்சனையாக நடத்துகிறது. இதைக் கண்டித்து வரும் 8-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x