Last Updated : 17 Feb, 2018 01:28 PM

 

Published : 17 Feb 2018 01:28 PM
Last Updated : 17 Feb 2018 01:28 PM

திரிபுராவில் நாளை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு: 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை அசைக்க பாஜக தீவிரம்

 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. அங்கு 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் வேட்பாளர் ராமேந்திர நாராயன் கடந்த 5 நாட்களுக்கு முன் திடீரென இறந்துவிட்டதால், ஒரு தொகுதிக்கு மட்டும் மார்ச் 12-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

திரிபுராவில் பழங்குடியினருக்காக மட்டும் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவில் உள்ள மொத்தம் 60 தொகுதிகளில் மொத்தம் 307 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான இடது முன்னணி, ஆர்எஸ்பி, பார்வார்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி(ஐபிஎப்டி) கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. பாஜக 51 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சி இந்த முறை 59 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கோமதி மாவட்டத்தில் உள்ள காக்ரபான் தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்தவில்லை.

திரிபுராவில் ஏறக்குறைய 25 லட்சத்துக்கு 73 ஆயிரத்து 413 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 47 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள்.

நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிவரை நடக்கும். மொத்தம் 3 ஆயிரத்து 214 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 47 மையங்கள் பெண்கள் மட்டுமே மேலாண்மை செய்யும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த கால்நூற்றாண்டுகளாக அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக மாணிக் சர்க்கார் 1998ம் ஆண்டில் இருந்து இருந்து வருகிறார். இந்த முறையும் அவர் வென்று 6-வது முறையாக முதல்வராக பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் தடம் பதிக்கும் முயற்சியுடன் பாஜக தீவிரமாக பிரசாரம் செய்தது. பிரதமர் மோடி திரிபுராவில் மட்டும் 4 கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். கட்சியின் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ஸ்மிருதி இராணி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தற்கு பலன் அளிக்குமா என்பது தெரிந்துவிடும்.

அதேசமயம், 5-வது முறையாக முதல்வராக இருந்து வரும் மாணிக் சர்க்கார் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளார். மேலும், இடது சாரித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கூட்டங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், இறுதியாக அகர்த்தலா அருகே கைலாஷ்சரார் நகரில் பிரசாரம் செய்தார்.

தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் அதிகாரி தரணிகாந்தி கூறுகையில், ''திரிபுராவில் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x