Published : 03 Feb 2024 07:31 AM
Last Updated : 03 Feb 2024 07:31 AM

ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட விவகாரம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 3-ம் நாளான நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஜார்க்கண்ட் விவகாரத்தை எழுப்பினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:

ஒரு மாநிலத்தில் முதல்வர் ராஜினாமா செய்யும் போது பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவைபெற்றுள்ள கட்சியை ஆளுநர் ஆட்சிஅமைக்க அழைக்க வேண்டும். ஆனால் ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம் கட்சியின் புதிய சட்டமன்ற குழு தலைவர் சுமார் 20 மணி நேரம் காத்திருந்த பிறகே ஆளுநரை சந்திக்க முடிந்தது. எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் இருந்தபோதிலும் அவர் உடனே ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை. ஆனால் பிஹாரில் நிதிஷ் குமாரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு, 12 மணி நேரத்தில் அங்கு புதிய அரசு பதவியேற்றுள்ளது. பிஹாரில் நடந்தது ஏன் ஜார்க்கண்டில் நடக்கவில்லை? இது வெட்கக்கேடானது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

இதற்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எழுந்து, “மிகப்பெரிய நில மோசடியை ஜார்க்கண்ட் மாநிலம் கண்டது. இதுவேஹேமந்த் சோரனின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது. ஒரு முதல்வர்எவ்வாறு நில மோசடியில் ஈடுபடலாம்? அந்த முதல்வரை காங்கிரஸ் பாதுகாத்து வருகிறது. ஊழல் பற்றி காங்கிரஸ் பேசவில்லை. காங்கிரஸின் மரபணுவிலேயே ஊழல் இருப்பதையே காட்டுகிறது.மேலும் ஒரு ஆளுநரின் நடத்தையை அவையில் விவாதிக்க முடியாது. ஆட்சி அமைக்க ஒருவரை ஆளுநர் அழைக்கும் முன்பாக அவர் திருப்தி அடைய வேண்டும்” என்றார்.

இதை ஏற்காத காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “ஏன் அந்த மாநிலம் தலைமை இல்லாமல் இருந்தது? ஏன் அங்கு இடைக்கால ஏற்பாடு செய்யப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினர். பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பாரத் ராஷ்டிர சமிதி கேசவ ராவ் பேசும்போது, “எல்லா நேரங்களிலும் ஒரு அரசு இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த நாடு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் இயங்க வேண்டும்” என்றார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷின் சர்ச்சைக்குரிய தனி நாடு கருத்தை பாஜக எம்.பி.க்கள் அவையில் எழுப்பினர்.

உச்ச நீதிமன்றம் மறுப்பு: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த சோரன் புதன்கிழமை இரவு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மனுதாரர் ஏற்கெனவே ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனு நிலுவையில் இருப்பதாகவும் எங்களுக்கு தெரிய வருகிறது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு மனுதாரர் முறையிடலாம். இந்த விவகாரத்தில் தற்போதைக்கு நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு எதிராக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தை ஹேமந்த் ஏற்கெனவே அணுகியிருந்தார்.

ஹேமந்த் சோரனின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை மேலும் 5 நாட்களுக்கு ராஞ்சி சிறப்பு நீதி மன்றம் நீட்டித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x