Published : 03 Feb 2018 11:37 AM
Last Updated : 03 Feb 2018 11:37 AM

ஹைதராபாத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தலை: நரபலியா என போலீஸார் விசாரணை

ஹைதராபாத்தில் வீட்டின் மாடியின் மீது வைக்கப்பட்ட குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலைக்குப் பின்னணியில் நரபலி கும்பல் இருக்கிறதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சில்காநகருக்கு உட்பட்ட உப்பால் எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் ஒரு வீட்டின் மாடியின் மீது வைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் அப்பகுதிவாசிகள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்நிலையில், உப்பால் பகுதி காவல் ஆய்வாளர் பி.வெங்கடேஸ்வரலு, "இந்த வழக்கைப் பொறுத்தவரை சந்திர கிரகணத்தன்று நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். வீட்டின் உரிமையாளர் கே.ராஜசேகர் இவர் கார் ஓட்டுநராக இருக்கிறார். அவரது அண்டைவீட்டைச் சேர்ந்த நரஹரி மற்றும் அவரது மகன் ரஞ்சித். இவர்கள் மூவர் மீதும் எங்களுக்கு சந்தேகம் இருப்பதால் அவர்களை விசாரித்து வருகிறோம். ஏனெனில், மோப்ப நாய்கள் இவர்கள் வீட்டை நோக்கியே காவலர்களை இழுத்துச் சென்றது.

இவர்கள் மூவரும் அடிக்கடி மூடநம்பிக்கையின்பால் ஏதாவது பூஜையில் ஈடுபடுவதும் எங்களுக்குத் தெரியவந்தது. எனவே, அவர்கள் மூவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். இதில் நரஹரி என்பவர் ஜங்கோன் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அடிக்கடி பேசியுள்ளார். அந்த நபர் குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

இதற்கிடையில், மீட்கப்பட்ட தலையை மட்டுமே வைத்து அது பெண் குழந்தையினுடையதா அல்லது ஆண் குழந்தையினுடையதா என்பதையோ அல்லது வயதையோ தீர்மாணிக்க முடியாது என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், தலை துண்டிக்கப்பட்டு 5 மணி நேரத்துக்குப் பின்னர்தான் அது மாடியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என உறுதி செய்தனர்.

அருகில் உள்ள மயானங்களிலும் போலீஸார் குழந்தையின் உடலைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x