Last Updated : 03 Feb, 2018 03:03 PM

 

Published : 03 Feb 2018 03:03 PM
Last Updated : 03 Feb 2018 03:03 PM

மக்கள் கவனத்தை திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

செயல் இழந்த நிர்வாகத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே எதிர்க்கட்சிகளின் மீது பொய்யான வழக்குகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு பதிவு செய்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நிருபர்களிடம் இன்று (சனிக்கிழமை) பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் இழந்த நிர்வாகத்தால் மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். அவர்களின் கவனத்தை திசை திருப்பவே எதிர்க்கட்சிகளின் மீது மத்திய அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது.

ஆனால், இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எல்லாம் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பணிந்துவிடாது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீது மக்களின் கோபம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உதாரணமாக, 12 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என சிபிஐ மூலம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்த பாஜக நினைக்கிறது.

அரசியல் லாபத்துடன் பாஜக தலைவர்கள் இதுபோன்ற சதிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக பொய் வழக்குகளை பதிவு செய்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம்.

ஹரியாணாவின் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட 33 பேர் மீது மனேசரில் நடந்த ரூ.1500 கோடி ஊழல் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை.

ஹரியாணா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் செயலற்ற தன்மையில் இருந்து மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூபேந்தர் சிங் ஹூடா, வீரபத்ர சிங், அசோக் கெலாட், சச்சின் பைலட், ப.சிதம்பரம் அவரின் குடும்பத்தார், அசோக் சவான், ஷீலா தீக்ஷித், ஹரிஷ் ராவத் ஆகியோர் பாஜக அரசின் பொய் வழக்குளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் எழுந்துள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு முயல்கிறது. சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை கைப்பாவைகள் போல் மத்திய அரசு பயன்படுத்துகிறது.

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x