Published : 21 Jan 2024 06:09 PM
Last Updated : 21 Jan 2024 06:09 PM

‘ராமர் கோயில் திறப்பு விழா முடிந்ததும் ராகுல் காந்தி தரிசனத்துக்கு வரலாம்’- அசாம் கோயில் நிர்வாகம்

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை (திங்கள்கிழமை) ராமர் கோயில் திறப்பு விழா முடிந்ததும் சாமி தரிசனத்துக்கு வரலாம் என்று அசாமிலுள்ள படத்ரவா தான் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து படத்ரவா தான் கோயில் நிர்வாக கமிட்டி கூறுகையில், “அயோத்தி ராமர் கோயிலில் நாளை பிரான் பிரதிஷ்டா நடைபெறுகிறது. அதனால் இங்கு கோயிலுக்கு நிறைய பக்தர்கள் வருவார்கள்.அதுவும் தவிர கோயிலுக்கு வெளியே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் ராகுல் காந்தி பிற்பகல் 3 மணிக்கு மேல் தரிசனத்துக்கு வரலாம் என நிர்வாக கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

படத்ரவா தான் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜோகேந்திர நாராயண் தேவ் மஹந்தா, “ராகுல் காந்தி தானுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நாளைக்கு 10,000 பேருக்கு மேல் கோயிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். அந்த நேரத்தில் ராகுல் காந்தி கோயிலுக்கு வந்தால் அவருக்கு வரவேற்பு அளிப்பதில் சில சிரமங்கள் ஏற்படலாம்.

இன்று நடந்த படத்ரவா தான் நிர்வாகக் குழுவின் கர்நாதர் கமிட்டி கூட்டத்தில், அவர் நாளை 3 மணிக்கு மேல் வரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு எங்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடியும். இதுகுறித்து உள்ளூர் எம்எல்ஏ, ஆணையர், காவல்த்துறை கண்காணிப்பாளருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்குள்ள ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடமான படத்ரவ சத்ராவுக்கு திங்கள்கிழமை சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். துறவி, அறிஞர், சமூக - மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார்.

முதல்வர் வேண்டுகோள்: முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை வடகிழக்கு மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நாளை படத்ரவா தானுக்கு செல்ல வேண்டாம் என்று அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர், “ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது ராகுல்காந்தி படத்ராவ தானுக்கு செல்லவேண்டாம் என்று நாங்கள் அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அது அசாமில் எதிர்மறையான நிலைமையை உருவாக்கும்" என்று தெரிவித்தார். மேலும் பகவான் ராமருக்கும் இடைக்காலத்தில் வாழ்ந்த வைணவத் துறவிக்கும் இடையில் எந்தப்போட்டியும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய ஹேமந்த பிஸ்வா, அசாமுக்கு வருத்தம் தரும் தேவையற்ற போட்டி எதையும் உண்டாக்காமல், ராமர் கோயில் திறப்பு விழா முடிந்ததும் ராகுல் காந்தி ஸ்ரீமந்த சங்கர்மகாதேவ பிறந்த இடத்துக்குச் செல்லாம்” என்றார்.

இதனிடையே ராகுல் காந்தியின் யாத்திரை நாளை திட்டமிட்டபடி நடக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்தி திங்கள்கிழமை காலை தானுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் அன்றைய யாத்திரையைத் தொடங்குவார். அண்டை மாநிலமான மேகாலயாவுக்குள் யாத்திரை நுழைவதற்கு முன்பு அவர் மோரிகான் மாவட்டம் வழியாக பயணம் செய்வார்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் சனிக்கிழமையன்று அசாமில் நியாய யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், வடக்கு லக்கிம்பூரில் பேனர்கள் கிழிக்கப்பட்டதாகவும் கூறிய காங்கிரஸ் கட்சி யாத்திரைக்கு முதல்வர் சிரமங்களை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x