Published : 21 Jan 2024 01:33 PM
Last Updated : 21 Jan 2024 01:33 PM

“அது வரை நோய் காத்திருக்கும்...”: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அரைநாள் விடுப்பைப்  திரும்பப்பெற்றது டெல்லி எய்ம்ஸ்

புதுடெல்லி: ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு திங்கள்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு (OPD) மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என்ற தங்களின் முந்தைய அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்வினையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகமானது உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நாளை (திங்கள்கிழமை) ராமர் கோயில் திறக்கப்படுவது நாடு முழுவதும் கொண்டாடுவதை முன்னிட்டு மருத்துவமனையின் அலுவல்களுக்கு அரைநாள் விடுப்பு விடுவதாக அறிவித்திருந்தது. மருத்துமனையின் முக்கியமான பணிகள் வழக்கம்போல நடக்கும் என்று உறுதியளித்திருந்த போதிலும் நிர்வாகத்தின் அரைநாள் விடுப்பு முடிவு, அரசியல் களத்தில் பெரும் எதிர்வினையைத் தூண்டியது. நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தன.

மருத்துவமனையின் முடிவு குறுத்து சிவ சேனா (உத்தவ் அணி) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம் மக்களே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உத்தம புருஷர் ராமரை வரவேற்க இருப்பதால், ஜன.22 ஆம் தேதி அவசரக் காரணங்களுக்காக கூட யாரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். அப்படி கட்டாயம் செல்ல வேண்டும் என்றால் மதியம் 2 மணிக்கு பின்னர் செல்லுங்கள். பின்குறிப்பு: ஆனால் தன்னை வரவேற்பதற்காக மக்களின் சுகாதார சேவைகளை நிறுத்தி வைப்பதை ராமர் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. ஹே ராம், ஹே ராம்” என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சாகேத் கோகலே கூறுகையில், “இந்தியாவின் மிகப் பெரிய அரசு மருத்துமனையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திங்கள்கிழமை மதியம் 2.30 மணி வரை மூடப்படுகிறது. மருத்துவர்களைப் பார்க்க மக்கள் மருத்துவமனையின் வாசலில் வெளியே நடுங்கும் குளிரில் தூங்கிய படி காத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் காமரா மற்றும் விளம்பர மோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதால், எளிய மக்கள் இறக்க நேரிடும் தருவாயிலும் காத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, “இந்தியாவின் மிகப் பெரிய அரசு மருத்துமனையான டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை திங்கள் கிழமை மதியம் 2.30 மணி வரை மூடப்படுகிறது. நரேந்திர மோடியின் அரசியல் நிகழ்வு தடையின்றி ஒளிபரப்ப வேண்டும் என்பதால், நோயாளிகளின் வாழ்க்கை அபாயத்தில் தள்ளப்படுவது குறித்து எந்த அக்கறையும் இல்லை. இந்த மனிதனின் மெகாலோமேனியாவுக்கு எல்லைகளே கிடையாதா?” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

திரும்பப் பெறப்பட்ட அறிவிப்பு: திங்கள்கிழமை மதியம் 2.30 மணி வரை மருத்துவமனைக்கு விடுமுறை விடப்படும் என்ற முடிவுக்கு எதிர்வினை அதிகரித்த நிலையில் தங்களின் முந்தைய முடிவை எம்ய்ஸ் நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நோயாளிகளுக்கு எந்தவித சிரமும் ஏற்படாத வகையில், மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை வழக்கம் போல செயல்படும்” என்று தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் திறப்பு: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் அல்லது பிராண் பிரதிஷ்டா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதனிடையே பொது மக்களுக்கான தரிசனம் ஜனவரி 23 முதல் தொடங்கும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x