Published : 21 Jan 2024 06:30 AM
Last Updated : 21 Jan 2024 06:30 AM

பிரான் பிரதிஷ்டா விழாவை முன்னிட்டு உலகின் மிகப் பெரிய பூட்டு அயோத்தி வந்தன

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவை முன்னிட்டு, 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப் பெரிய பூட்டு, 1265 கிலோ லட்டு பிரசாதம் ஆகியவை அயோத்தி ராமர் கோயில் வந்தடைந்தன.

அயோத்தி ராமர் கோயில் கட்டத் தொடங்கியவுடனே, அதற்கு பக்தர்கள் பலர் பல பொருட்களை தானமாக அளிக்க முன்வந்தனர். தற்போது அயோத்தி பிரான் பிரதிஷ்டா விழா நாளை நடைபெறவுள்ளதால், பக்தர்கள் அனைவரும் தங்கள் காணிக்கை பொருட்களை அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர்.

உத்தர பிரதேசம் அலிகரில் பூட்டு தயாரிக்கும் தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பூட்டுகள் பிரபலமானவை. இங்கு பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மனி ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு, ராமர் கோயிலுக்காக 400 கிலோ எடையில் உலகின் மிகப் பெரிய பூட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த பூட்டை தயாரித்து முடிக்கும் முன்பே சத்ய பிரகாஷ் சர்மா இறந்து விட்டார்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அலிகர் நகரின் நவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த மகாமண்டலேஷ்வர் அன்னபூர்னா பாரதி புரி என்பவர், அந்த பூட்டை தயாரித்து முடிக்கும் பணியில் ஈடுபட்டார். தற்போது பூட்டு தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து விட்டதால், அந்த பூட்டுக்கு மகாமண்டலேஷ்வர் சிறப்பு பூஜை செய்து அதை அயோத்திக்கு அனுப்பி வைத்தார். அப்போது, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டனர்.

இந்த பூட்டு தயாரிப்பு குறித்து மகாமண்டலேஷ்வர் கூறுகையில், ‘‘ இந்த பூட்டு அலிகர் நகரின் புகழ்பெற்ற பூட்டுக்கு அடையாளமாக இருக்கும். இதன் மூலம் அலிகர் நகருங்கு சர்வதேச அங்கீகாரம் கொண்டுவருவதுதான் எங்கள் நோக்கம்’’ என்றார்.

1265 கிலோ லட்டு: தெலங்கானாவைச் சேர்ந்த நாகபூஷனம் ரெட்டி என்பவர் ஹைதராபாத்தில் இருந்து 1,265 கிலோ லட்டு பிரசாதத்தை அயோத்தி அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘எனது தொழிலையும், எனது குடும்பத்தையும் கடவுள் நல்ல நிலையில் வைத்துள்ளார். நான் உயிரோடு இருக்கும் வரை நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ எடையுடன் கூடிய லட்டு தயாரித்து கொடுக்க உறுதியளித்துள்ளேன். நாங்கள் தயாரிக்கும் லட்டுக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். ராமர் கோயிலுக்கு பிரசாதமாக அனுப்பப்பட்ட 1,265 கிலோ லட்டு தயாரிக்கும் பணியில் 25 பேர் 3 நாட்களாக ஈடுபட்டனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x