Published : 20 Jan 2024 07:22 PM
Last Updated : 20 Jan 2024 07:22 PM

மேற்கு வங்கத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட மம்தா திட்டம்? - ‘கவலை இல்லை’ என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் அனைத்து தொகுதியிலும் போட்டியிட திரிணமூல் காங்கிரஸ் தயங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள நிலையில், அதுபற்றி கவலை இல்லை என மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹரன்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட வேண்டும் என நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.

அதோடு, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டியிடவும் கட்சி தயங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "அதுபற்றி எனக்கு கவலை இல்லை. இந்த பிரச்சினை குறித்து எங்கள் தலைவர்கள் ஏற்கெனவே பேசி இருக்கிறார்கள். நான் இந்த நிலைக்கு எளிதாக வந்துவிடவில்லை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டும், தேர்தலில் வெற்றி பெற்றுமே வந்துள்ளேன். எப்படி போட்டியிடுவது, எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்குத் தெரியும்" என தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சிப்பவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருப்பதால், இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x