Published : 31 Dec 2023 04:59 AM
Last Updated : 31 Dec 2023 04:59 AM

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் தீபம் ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அயோத்தி: அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதிநடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமானநிலையம், ரயில் நிலையம் எனரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கிவைப்பதற்காக நேற்று அயோத்தி சென்ற பிரதமர் மோடியை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’: அங்கிருந்து ‘அயோத்தி தாம்'ரயில் நிலையம் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு மலர்கள் தூவி வரவேற்றனர். சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு காரின் கதவில் நின்றபடி மக்களின் வரவேற்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

பின்னர், ரூ.240 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட ‘அயோத்தி தாம்' ரயில் நிலையத்தை திறந்துவைத்த பிரதமர், தர்பங்கா (பிஹார்) - டெல்லி மற்றும்மால்டா (மேற்குவங்கம்)- பெங்களூரு இடையேயான 2 அம்ருத் பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.

மேலும், அயோத்தி தாம் - டெல்லி, கத்ரா - டெல்லி, அமிர்தசரஸ்- டெல்லி, கோவை-பெங்களூரு, மங்களூரு- மட்காவ் (கோவா), ஜால்னா (மகாராஷ்டிரா) - மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான 6 வந்தே பாரத்ரயில் சேவைகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அம்ரித் பாரத் ரயில்களை உருவாக்கிய சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆலை பொறியாளர்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த சிறுவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

பின்னர், அயோத்தியில் ரூ.1,463 கோடியில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும், ராமர் கோயிலுக்குச் செல்வதற்காக அகலப்படுத்தப்பட்ட ராம்பாத், பக்திபாத், தரம்பாத்,ராம் ஜென்மபூமி பாத் ஆகிய 4 சாலைகளையும் திறந்துவைத்தார்.

மேலும், அயோத்தியின் 4 நுழைவுவாயில்களைப் புதுப்பித்து அழகுபடுத்துதல், ரூ.2,800 கோடியிலான பசுமை குடியிருப்பு, ரூ.300 கோடியிலான வசிஷ்ட குஞ்ச் குடியிருப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

550 ஆண்டு காத்திருப்பு: பின்னர் அயோத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 550 ஆண்டுகால காத்திருப்பு, வேதனைக்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. ஜன. 22-ல்நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக உலகம்முழுவதும் வாழும் இந்துக்களுடன், நானும் பேராவலோடு காத்திருக்கிறேன்.

அன்றைய விழாவில் அனைவரும் பங்கேற்பது சாத்தியமில்லை. எனவே, அன்று அயோத்திக்கு வர முயற்சி செய்வதற்குப் பதிலாக, கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றிவழிபட வேண்டும். அந்த நாளைதீபாவளியைப் போல பெரிய பண்டிகையாக கொண்டாட வேண்டும்.கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அயோத்திக்கு வந்து ராமரை கண்குளிர வழிபடலாம்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகுஅயோத்தியில் குழந்தை ராமர்தங்க நிரந்தரக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய அரசின் முயற்சியால் நாடு முழுவதும் 4 கோடி குடும்பங்கள் தங்கநிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போது ‘அயோத்தி தாம்' ரயில்நிலையத்தை தினமும் 15,000 பேர் பயன்படுத்தலாம். விரிவாக்கத்துக்குப் பிறகு 60,000 பேர் வரை பயன்படுத்த முடியும்.

மகர சங்கராந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மை இயக்கத்தை மக்கள் முன்னெடுக்க வேண்டும். ஜனவரி 14 முதல் இந்த தூய்மை இயக்கத்தை தொடங்க அழைப்பு விடுக்கிறேன்.

ஸ்மார்ட் நகரமாக மாறும்... அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி குடமுழுக்கு செய்யப்பட உள்ள ராமர் கோயிலுக்கு தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு அயோத்தி ஸ்மார்ட் நகரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் பல திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படும். நாடுமுழுவதும் உள்ள நமது புனித தலங்கள் மற்றும் பாரம்பரியம் ஆகியவை போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. அதேநேரத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் வேகம் பெற்றுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x