Published : 27 Dec 2023 05:34 AM
Last Updated : 27 Dec 2023 05:34 AM

ஆள் கடத்தல் புகாரால் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரான்ஸில் சிக்கி தவித்த 276 பேர் மும்பை வந்தனர்

மும்பை: ஆள் கடத்தல் புகார் காரணமாக விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரான்ஸில் சிக்கித் தவித்த 276 பேர் நேற்று மும்பை வந்தடைந்தனர். 27 பேர் அங்கேயே தங்க அனுமதி கோரி உள்ளனர். லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் (தனியாக) உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிகரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரிவிமான நிலையத்தில் தரையிறங்கிஉள்ளது.

இதில் ஆள் கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர். அதில் இருந்தவர்களை விமான நிலையத்தில் தங்க வைத்தனர். பயணிகளில் இருவரிடம் பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும் பயணிகளிடம் நீதித் துறை விசாரணை நடைபெற்றது. இதில், பயணிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விமானம் அங்கிருந்து புறப்பட அனுமதி வழங்கினர்.

27 பேர் வரவில்லை: இதையடுத்து, நேற்று முன்தினம் வாட்ரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது. இதில் 276 பயணிகள் மட்டுமே வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். 5 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்ஸிலேயே தங்க அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது. அங்கேயே தங்கி உள்ள அவர்கள் எந்த நாட்டினர் எனத் தெரியவில்லை. சர்வதேச சட்டப்படி, அடைக்கலம் கோருவோரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது.மேலும் ஆட்களை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய 2 பேர் பிரான்ஸிலேயே உள்ளனர்.

முகத்தை மூடியபடி.. இந்த விமானத்தில் மும்பை வந்த பயணிகள் காலை 8.30 மணி அளவில் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். வெளியில் சென்ற அவர்கள் தங்கள் முகத்தை மூடியபடியே சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தங்கள் பயணம்குறித்த தகவலை ஊடகங்களிடம் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், “சொந்த செலவில் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்" என ஒரு பயணி தெரிவித்தார். எனினும், இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள், மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா சென்று அங்கிருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழைவதுண்டு. இந்நிலையில் தான் நிகரகுவா சென்ற விமானம்தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x