Published : 27 Dec 2023 08:04 AM
Last Updated : 27 Dec 2023 08:04 AM

விருந்து பட்டியலில் நல்லி எலும்பு இல்லாததால் தெலங்கானாவில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்

ஹைதராபாத்: நிச்சயதார்த்த விருந்தில், நல்லி எலும்பு இல்லாத காரணத்தினால் தெலங்கானாவில் ஒரு திருமணமே நின்று போனது.

தெலங்கானா மாநிலத்தில் பரவலாக இந்து திருமணங்களிலும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. இதனை ஒரு அந்தஸ்தாக கருதுகின்றனர். ஆதலால், திருமணம் முடிந்ததும், தடபுடலாக பல வகை அசைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்த்த பெண்ணுக்கும், ஜகத்தியாலா பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது, பெண் வீட்டார் நிச்சயதார்த்த விழாவிற்கே தடபுடலாக அசைவ உணவு வகைகளை பரிமாறியுள்ளனர்.

ஆனால், இந்த கறி விருந்தில், நல்லி எலும்பு பரிமாறப்பட வில்லை எனும் வாதம் மாப்பிள்ளை வீட்டார் பக்கத்தில் எழுந்தது. இது மெல்ல பரவி, பெண் வீட்டாரின் காதுகளுக்கு எட்டியது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி, இறுதியில் அது கை கலப்பில் கொண்டு போய் விட்டு விட்டது.

இது குறித்து சிலர் போலீஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததால், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இரு வீட்டாரையும் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த சம்பவத்தால், மனம் உடைந்ததாகவும், அவமானம் ஏற்பட்டதாகும் கூறி, மாப்பிள்ளை விட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விடுவதாக அறிவித்துள்ளனர்.

பெண் வீட்டாரும், இந்த திருமணத்திற்கு நாங்களும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர். நல்லி எலும்பால் ஒரு திருமணமே நின்று போகும் காட்சிகள், சமீபத்தில் வெளியான ‘பலகம்’ எனும் தெலுங்கு சினிமாவில் இருந்தது. அது இந்த சம்பவத்தால் உண்மையாகி விட்டது என பலர் கருத்து கூறி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x