Last Updated : 27 Dec, 2023 06:21 AM

 

Published : 27 Dec 2023 06:21 AM
Last Updated : 27 Dec 2023 06:21 AM

ஆண்டாள் திருப்பாவை 11 | பரந்தாமனைப் பாடி துதிப்போம்..!

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகசெய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் வல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே, பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் பசு மற்றும் எருமைக் கூட்டங்கள் அதன் கன்றுகளோடு சேர்த்து பராமரிப்பர். அவற்றின் பாலைக் கொண்டு தயிர், வெண்ணை, நெய் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்வது வழக்கம். அதர்மத்தோடு வலிய வரும் பகைவர்களை எதிர்த்து அழிப்பவர்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவதுண்டு. அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த செல்வச் செழிப்பு மிக்க மகளே! தங்கக் கொடியைப் போன்று இருக்கும் பெண்ணே! நாகத்தைப் போன்ற அகலமான கண் புருவம், மயில் தோகை போன்ற அழகிய கூந்தல் ஆகியவற்றை உடைய அழகுப் பதுமையே!

புறத்தூய்மை, அணிகலன் துறப்பு, உணவுக் கட்டுப்பாடு, நாம சங்கீர்த்தனம் ஆகியவை பாவை நோன்பின் இயல்பாகும். ஆயர்குலப் பெண்கள் அனைவரும் நோன்பின் நெறிமுறைகளை கடைபிடித்து, உன் இல்லத்து வாசலில் வந்து கார்மேக வண்ணனான அந்தக் கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறோம். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாகக் காக்கும் நீயோ, அனைத்தையும் மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்.

அர்த்தமற்ற இந்த உறக்கத்தால் (இருள், அறியாமை) எந்தப் பயனும் இல்லை என்று கூறி பரந்தாமனை பாடித் துதிக்க, உறங்கும் பெண்ணை ஆண்டாளின் தோழிகள் எழுப்புகின்றனர். கால தாமதம் ஆனதால், தோழியை விட்டுவிட்டு நீராடச் செல்லாமல், ஆண்டாள் உள்ளிட்டோர் அவளை எழுப்பி, அனைவரும் இணைந்தே இறைவன் புகழ் பாடி அவன் அருளைப் பெற வேண்டும் என்று விழைகின்றனர். நாம் பெறப்போகும் இறையின்பத்தை அனைவரும் பருக வேண்டும் என்று நினைப்பதையே இப்பாசுரம் விளக்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x