Published : 23 Dec 2023 07:04 AM
Last Updated : 23 Dec 2023 07:04 AM

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக மாநில கட்சிகளுடன் ஏன் சமரசம் செய்ய கூடாது: காங்கிரஸ் ஆலோசனை

புதுடெல்லி: பாஜகவை வீழ்த்துவதற்காக மாநிலக் கட்சிகளுடன் ஏன் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வி அடைந்தது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் 5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

3 மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு அந்த மாநிலங்களில் காங்கிரஸ் சரியான முறையில் பிரச்சாரம் செய்யாததுதான் என்றும் அங்குள்ள மாநிலக் கட்சிகளுடன் காங்கிரஸ் ஏன் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்றும் கூட்டத்தில் ராகுல் கேள்வி எழுப்பினார். 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் ராகுல் காந்தி அப்போது தெரிவித்தார்.

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் பிரச்சாரம் செய்தபோதும் காங்கிரஸ் தோல்வி கண்டது என்றும் அவர் சுயமாக செயல்பட்டதாகவும், மூத்த தலைவர்களின் கருத்துக்கு அவர் மதிப்பளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் 3 மாநிலங்களில் சிறிய கட்சிகளுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் பாஜகவுக்கு சென்றுவிட்டதாகவும், அதனால்தான் காங்கிரஸ் தோல்வியடைய நேரிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது

பாஜகவுக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு மாநிலக் கட்சிகள், சிறியக் கட்சிகளின் ஆதரவு காங்கிரஸுக்குத் தேவை என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுக்குத் தேவையான இடங்களைக் கொடுத்து, பாஜகவை வீழ்த்த திட்டம் வகுக்கவேண்டும் என்றும் ராகுல் அப்போது கருத்து தெரிவித்தார். இதையடுத்து பேசிய கார்கே, மாநிலக் கட்சிகளுக்கு 4 முதல் 5 இடங்களைத் தருவதில் பிரச்சினை இருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க இண்டியா கூட்டணியை வலுவான கூட்டணியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் எடுக்கும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x