Published : 23 Dec 2023 04:19 AM
Last Updated : 23 Dec 2023 04:19 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ரங்கா, ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

படங்கள்: ர.செல்வ முத்துக்குமார்.

திருச்சி / ஸ்ரீவில்லிபுத்தூர்: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வந்தாலும், திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

பகல் பத்து திருமொழி திருநாள், ராப்பத்து திருவாய்மொழி திருநாள் என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 12-ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பகல் பத்து திருநாள் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல் பத்து திருநாளின் 10-ம் திருநாளில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரானநம்பெருமாளுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள்நடைபெற்றன. அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகியசிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கேட்டான் வாயில், தங்கக்கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை அடைந்தார். அங்கு வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதினர்.

அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே பிரவேசித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் `ரங்கா, ரங்கா' என பக்திப் பரவசத்துடன் கோஷமெழுப்பினர். சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சந்நிதி, நடைப்பந்தல் வழியாக திருக்கொட்டகைக்கு வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது.

பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலையில் அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல் உள்ளிட்டவை நடைபெற்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் புறப்பட்டு, இரவு 10 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

சொர்க்கவாசல் திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் என்.காமினி, மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், அறநிலையத் துறை இணைஆணையர் பொன்.ஜெயராமன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

விழாவையொட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் என 2,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று ஒரே நாளில் 1.50 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூரில்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா தொடங்கியது. வடபத்ரசயனர் சந்நிதியில் உள்ள கோபாலவிலாசம் எனும் பகல் பத்து மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய ஆழ்வார் தினசரி காட்சியளித்தனர்.

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. `கோவிந்தா, கோபாலா' கோஷம் முழங்க பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர். அவர்களை பெரியாழ்வார், வேதாந்த தேசிகர், ராமானுஜர், நம்மாழ்வார், கூரத்தாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் வரவேற்றனர்.

ராப்பத்து மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நடைபெற்ற பின்னர், பக்தர்கள் பரமபதவாசல் கடந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். இதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

- எஸ்.கல்யாணசுந்தரம் / அ.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x