Published : 12 Dec 2023 06:19 AM
Last Updated : 12 Dec 2023 06:19 AM

சட்டப்பிரிவு 370 | தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்?

புதுடெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூரிய காந்த், கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, அலகாபாத் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார். அவரது தந்தை ஒய்.வி.சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் 16-வது தலைமை நீதிபதி ஆவார்.

நீதிபதி கிஷண் கவுல்: கடந்த 1982-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய கிஷண் கவுல், கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தின் ‘அட்வகேட் ஆன் ரெக்கார்ட்' ஆகப் பதவி வகித்தார். கடந்த 2003-ம் ஆண்டில் நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் கடந்த 2013-ல் பஞ்சாப் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி சஞ்சீவ் கன்னா: கடந்த 1983-ம் ஆண்டில் டெல்லி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக சஞ்சீவ் கன்னா பணியைத் தொடங்கினார். பின்னர் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2006-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2025 மே 13-ம் தேதி இவர் ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி பி.ஆர்.கவாய்: கடந்த 1987 முதல் 1990ம் ஆண்டு வரை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியை தொடங்கிய பி.ஆர். கவாய் கடந்த 2003-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2025-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி சூர்ய காந்த்: ஹரியாணாவின் ஹிசார் பகுதியை சேர்ந்த சூர்ய காந்த், கடந்த 1984-ம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். பின்னர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2004-ம் ஆண்டு பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2018-ம் ஆண்டில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x