Published : 27 Jan 2018 09:41 AM
Last Updated : 27 Jan 2018 09:41 AM

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மறுப்பு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பை பரிமாறிக் கொள்ள எல்லையோர பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் மறுத்துவிட்டனர்.

குடியரசு, சுதந்திர தின விழாக்களின்போது எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள், எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்த சம்பிரதாயம் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் நேற்று இந்தியாவில் 69-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இந்த தினத்தில் இனிப்புகளை பாகிஸ்தான் வீரர்களுடன் பரிமாறிக் கொள்ள எல்லையோர பாதுகாப்புப் படை வீரர்கள் மறுத்துவிட்டனர்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு நேற்று முன்தினமே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக எல்லையோர பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் எல்லையையொட்டி பஞ்சாப் மாநில பகுதியில் 553 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லையோர பாதுகாப்புப் படையினர் பாதுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக இந்த இனிப்பு பரிமாற்ற நிகழ்ச்சியானது அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துக்கு இனிப்பு

அதே நேரத்தில் வங்கதேச ராணுவத்தினருடன் இனிப்பு பரிமாறும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

மேற்கு வங்க மாநில ஜல்பைகுரி மாவட்டத்தையொட்டி வங்கதேச நாட்டின் எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இந்த மாவட்ட எல்லையோர பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் வங்கதேசத்தின் புல்பாரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வங்கதேச ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பதிலுக்கு அவர்களும் இனிப்புகளை இந்திய ராணுவ வீரர்களுக்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

- ஐஏஎன்எஸ் / ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x