Published : 18 Nov 2023 03:45 PM
Last Updated : 18 Nov 2023 03:45 PM

சுரங்கப் பாதையில் சிக்கிய 40 பேரின் குடும்பத்தினருக்கு உதவிகள்: உத்தராகண்ட் முதல்வர் அறிவிப்பு

டேராடூன்: உத்தராகண்ட்டில் சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ வசதிகளை மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக 7 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையில் உரிய முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ வசதிகளை மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். மீட்புப் பணி நடவடிக்கைகள் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மீட்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறது. மீட்பு நடவடிக்கையில் உள்ள தடைகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு சின்யாலிசோர் மற்றும் அதைச் சுற்றிய பகுதியில் தங்கும் இடம் வழங்கவும், அதோடு, அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை வழங்கவும் கார்வால் ஆணையருக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x