Published : 18 Nov 2023 11:17 AM
Last Updated : 18 Nov 2023 11:17 AM

உத்தராகண்ட் சுரங்க விபத்து | திடீரென விரிசல் ஒலி கேட்டதால் மீட்புப் பணிகளில் மீண்டும் சுணக்கம்

மீட்பு பணி | கோப்புப்படம்

டேராடூன்: உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் தொழிலாளர்கள் சிக்கி 150 மணி நேரத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சுரங்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை திடீரென விரிசல் ஒலி கேட்டதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இரண்டாவது துளையிடும் இயந்திரம் சேதமான நிலையில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் 6 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சுரங்க இடிபாடுகளுக்குள் சுமார் 65 முதல் 70 மீட்டர் வரை துளையிட்டு அதன் வழியாக 800 மி.மீ. 900 மி.மீ விட்டமுள்ள குழாய்களை ராட்சத துரப்பண (ட்ரில்) இயந்திரத்தின் உதவியுடன் உட்செலுத்தி அதன் மூலமாக சுரங்கத்தின் உள்ளே சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையை உருவாக்க வேண்டும் என்பதே திட்டம்.

இந்த நிலையில் மீட்பு பணிகளின் போது வெள்ளிக்கிழமை இரவு திடீரென விரிசல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் வெளியிடுட்டுள்ள அறிக்கை ஒன்றில், "இதற்கு முன்பாக இதே போன்ற சத்தம் கேட்டிருக்கிறது மேலும் அங்கே மீண்டும் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன." என்று தெரிவித்தார். இதனிடையே சுரங்கத்துக்குள் இருக்கும் வெப்பநிலை, வெளியே இருக்கும் வெப்பநிலையைவிட ஒப்பீட்டு அளவில் அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவர் ஆர்சிஎஸ் பவார்,"உள்ளே இருக்கும் ஆட்கள் குளிராக இருக்கிறது என்று இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. குளிர்காலங்களில் இரவு நேரத்தில் வெப்ப நிலை13 டிகிரி செல்சியஸ் வரை குறையும்" என்றார்.

இந்த மீட்பு பணிகளுக்கு மத்தியில் இந்திய விமானப்படை விமானம் ஒன்று 22 டன் எடையுள்ள புதிய இயந்திரம் ஒன்றை இந்தூரில் இருந்து டேராடூனுக்கு எடுத்துச் செல்ல இருக்கிறது. முன்னதாக பக்கவாட்டில் துளையிட உபயோகப்படுத்திய 25 டன் எடை கொண்ட அமெரிக்க இயந்திரம் எதிர்பார்த்ததை விட மெதுவாகவே செயல்படுகிறது. என்ஹெச்ஐடிசிஎல் இயக்குநர் அன்ஷு மணீஷ் கல்கோ கூறுகையில், "துளையிடும் போது வரும் கழிவுகளை வெளியேற்றியும், குழாய்களை உட்செலுத்துவதற்கு முன்பாக அவற்றை வெல்டிங்க் செய்ய வேண்டும் அதற்கு சற்று நேரம் எடுக்கும்" என்றார்.

இதனிடையே, சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஒடிசா மாநில தொழிலாளர் ஒருவரிடம் அம்மாநில அரசின் தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 40 பேரில் 5 பேர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் 40 பேர் என நம்பப்பட்டு வந்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை இரவு மேலும் ஒருவரையும் உள்ளே சிக்கியிருப்பவராக அடையாளம் கண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x