Last Updated : 11 Nov, 2023 06:34 AM

 

Published : 11 Nov 2023 06:34 AM
Last Updated : 11 Nov 2023 06:34 AM

மக்களவை தேர்தலில் முக்கியத்துவம் பெறும் இடஒதுக்கீடு: 65 சதவீத உயர்வை மத்திய அரசின் முடிவுக்கு தள்ளிவிடும் நிதிஷ் குமார்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் சாதிவாரி யான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு மறுக்கவே, பிஹார்முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம்தலைவருமான நிதிஷ்குமார் தனதுமாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் பிஹார் சட்டப்பேரவையில் சாதி வாரி கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பிஹாரில் இடஒதுக்கீடு அளவை 50 சதவீதத் தில் இருந்து 65 சதவீதமாக முதல்வர் நிதிஷ் குமார் உயர்த்தி யுள்ளார். இதற்கான மசோதா மாநில சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது.

இதன்படி, எஸ்.சி. பிரிவினருக்கு 20%, பழங்குடிகளுக்கு 2%, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 43% இடஒதுக்கீடு கிடைக்கும். இத்துடன் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு பிஹார் ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு நாடாளுமன்றமும் சட்டப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும். எனவே இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் தவிர 65 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்க முடியாது என்பது தெளிவு.

எனவே, பிஹாரின் இட ஒதுக்கீட்டு உயர்வுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைப்பது கேள்விக்குறியே. இதன்மூலம் இந்தஇடஒதுக்கீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு தடையாக இருப்பதாக வரும் மக்களவைத் தேர்தலில் அரசியல் செய்ய முதல்வர் நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம், நாடு முழுவதிலும் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் இடஒதுக்கீடு அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என தெரிகிறது

தற்போது 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு அளிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் தமிழ்நாடு மட்டுமே ஒரே மாநிலமாக கடந்த 1982 முதல் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் இருந்து 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு இதற்கு தடையான போது, முதல்வர் ஜெயலலிதா அதை எதிர்த்துப் போராடினார். அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று 69 சதவீதத்தை சட்டமாக்கி உறுதிப்படுத்தினார். இதன் பிறகு தமிழ்நாட்டை போல், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களும் இடஒதுக்கீட்டை உயர்த்த முயன்றன. எனினும் அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. மகாராஷ்டிராவுக்கு பிறகு கர்நாடகாவும் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியது. எனினும் அந்த உயர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x