Published : 01 Nov 2023 03:00 PM
Last Updated : 01 Nov 2023 03:00 PM

“மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்” - அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் ஷிண்டே உறுதி

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ஜால்நா மாவட்டத்தின் அந்தர்வாலி சராதி கிராமத்தில் அவர் உண்ணாவிதரம் இருந்து வருகிறார். மகாராஷ்டிரா அரசு, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். மராத்தா சமூகத்துக்கு முழுமையான குறைபாடு இல்லாத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், இதை வலியுறுத்தும் நோக்கில் இன்று மாலை முதல் தண்ணீர் கூட குடிக்கப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு புனே உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையில் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க தலைநகர் மும்பையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மராத்தா மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மராத்தா இடஒதுக்கீடு, சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், மற்ற சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும், இது தொடர்பாக ஆராய ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மராத்தா சமூகத்துக்கு நீதி வழங்குவதற்கு ஏற்ப விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். அதற்கு சிறிது காலம் ஆகும். எனவே, மராத்தா சமூக மக்கள் அமைதி காக்க வேண்டும்.

சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கி அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும். மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் புது வடிவத்தில் சென்று கொண்டிருக்கிறது. பாதுகாப்பற்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, அனைவரும் அமைதி காக்க வேண்டும், அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x