Published : 18 Feb 2023 05:22 AM
Last Updated : 18 Feb 2023 05:22 AM

ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா - தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

ஏக்நாத் ஷிண்டே

புதுடெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிதான் உண்மையான சிவசேனா கட்சி என்று அங்கீகரித்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு கடந்த 2019-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 145 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சிவசேனா 55 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க போதிய இடங்கள் இருந்தபோதும், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது. முதல்வர் பதவியை சிவசேனா கேட்டதால் பிரச்சினை என புகார் எழுந்தது. இதையடுத்து திடீர் திருப்பமாக சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கட்சி ‘மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டணி ஆட்சிக்கு 169 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி நடந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தக் கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனாவின் 35-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேதேர்வு செய்யப்பட்டார். முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக தேர்வானார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேதலைமையில் ஓர் அணியும், ஷிண்டே தலைமையில் மற்றொருஅணியும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என சொந்தம்கொண்டாடின. இது தொடர்பானபுகார் மனுக்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான வில் - அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வரவேற்றுள்ளார். மேலும் பால் தாக்கரேவின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x