Published : 20 Oct 2023 06:12 PM
Last Updated : 20 Oct 2023 06:12 PM
சத்தீஸ்கர் மாநிலத்தின் வளங்களை காங்கிரஸ் கட்சி சூறையாடி, அந்த மாநிலத்தை பின்னுக்குத் தள்ளுகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஐந்து மாநிலத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவரக்ளும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்கின்றன. தற்போது சத்தீஸ்கர் சட்டசபைக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “ பூபேஷ் பாகேல் அரசாங்கத்தின் மோசடிகளால் பொதுமக்கள் சோர்வடைந்துள்ளனர். மேலும் சத்தீஸ்கர் மாநிலம், காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் ஆக மாறுவதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தின் வளங்களை காங்கிரஸ் கட்சி சூறையாடி, அந்த மாநிலத்தை பின்னுக்குத் தள்ளுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் சாதகமாக உள்ளது. பிரதமர் மோடி இந்த மாநிலத்திற்கு பல திட்டங்களை உறுதி செய்துள்ளார். அதோடு பல்வேறு திட்டங்கள் அவரது தொலைநோக்கு பார்வையின் கீழ் துவக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
முன்னதாக, நவம்பரில் நடைபெற உள்ள சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 40 நட்சத்திர பிரசாரகர்களின் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியா, தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT