Published : 17 Sep 2023 05:31 AM
Last Updated : 17 Sep 2023 05:31 AM

அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கரோனா திட்டத்தின் பலனை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: கரோனா காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்களை அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் அனை வருக்கும், அரசின் உதவித் திட்டங்கள் கிடைப்பது தொடர்பாக பவுலோமி பாவினி சுக்லா என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் 5 ஆண்டு காலமாக இதற்கு பதில் அளிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் பாவினி சுக்லா மீண்டும் அணுகினார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதாடிய மனுதாரர் பாவினி சுக்லா, ‘‘கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்விஉரிமை சட்டம் மற்றம் பிஎம்கேர்ஸ் நிதி திட்டம் ஆகியவற்றின் கீழ் பலன்கள் கிடைக்கின்றன. இதேபோன்ற பலன்கள்,பெற்றோர்களை இழந்த அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பலன்கள் ஆதரவற்றகுழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் செய்ய முடியும்’’ என்றார்.

20% இடஒதுக்கீடு: இந்த வழக்கில் வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்க 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த பலன் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றார்.

அதன்பின் மத்திய அரசு சார்பில்ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி யிடம் நீதிபதிகள் கூறியதாவது:

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான சரியான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெற்றோர் விபத்தில் இறந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்தாலும், அவர்களின் குழந்தைகள் ஆதர வற்றவர்கள்தான். அதனால் பிஎம் கேர்ஸ் நிதி உட்பட அனைத்து திட்டங்களும் இதர ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கிடைக்கும் சாத்தியங்களை மத்திய அரசு ஆராய வேண்டும்’’ என்றனர்.

இதற்கு பதில் அளித்த விக்ரம் ஜித் பானர்ஜி, ‘‘இது தொடர்பாக மத்திய அரசிடம் பதில் பெற்று 4 வாரத்துக்குள் தாக்கல் செய்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x