Last Updated : 26 Dec, 2017 09:53 AM

 

Published : 26 Dec 2017 09:53 AM
Last Updated : 26 Dec 2017 09:53 AM

அரசியலில் ஊழல்களுக்கும் சாதிகளுக்கும் என்ன தொடர்பு?

ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்குகளில் பிடிபடுவதும், தண்டிக்கப்படுவதும் அதிகமாகிறதா? சில உண்மைகளை ஆராய்வோம்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நிலக்கரி ஊழல் வழக்கில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மது கோடா, லஞ்சம் – கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிபு சோரன் ஆகியோர் பழங்குடி வகுப்பினர். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலித். லாலு பிரசாதும் முலாயம் சிங்கும் யாதவ சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள். அவ்விருவரும் ஊழல் செய்ததாகவும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும் வழக்குகளுக்கு உள்ளானவர்கள்.

ஊழல் வழக்கில் மேல் சாதிக்காரர்களும் சிக்காமல் இல்லை. சுக் ராம், ஜெயலலிதா, சுரேஷ் கல்மாடி முக்கியமானவர்கள். இவர்களைப் போன்ற மேல் சாதிக்காரர்கள் பிடிபடுவது மிகவும் குறைவு. சுக் ராமின் கட்டிலிலிருந்தே கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டும், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டும், அவர் சிறைக்கே செல்லவில்லை. இப்போது சுக் ராமுக்கு வயது 90. பாஜகவில் சேர்ந்து புதுவாழ்வு பெற்றுவிட்டார். தேர்தல் நேரத்திலேயே அவர் கட்சி மாறினார். அவருடைய மகன் அனில் இப்போது இமாச்சல பிரதேச பாஜக சட்டப் பேரவை உறுப்பினர். அமைச்சராகக் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆ. ராசாவுக்கோ அவருடைய குழந்தைகளுக்கோ இப்படிப்பட்ட அதிருஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

என்னடா இவர் ஊழல் வழக்கில் கூட சாதி பார்த்து எழுதுகிறாரே என்று கோபத்தில் கொதிக்கும் முன்னதாக, நான்கு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளக் கோருகிறேன்.

முதலாவதாக, சுக் ராமும் ராஜாவும் தகவல்தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தபோதே ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவதாக, சுக் ராம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ராஜா இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மூன்றாவதாக, முதலாமவர் வீட்டில் கட்டிலில் படுக்கைக்கு அடியிலிருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மற்றொருவர் விஷயத்தில் பணம் எங்கே என்று நீதிபதியே எகத்தாளமாகக் கேட்கிறார்? பணம் இல்லை என்றால் ஊழல் என்ன என்று கேட்டுவிட்டு வழக்கிலிருந்து விடுவிக்கிறார்.

இப்போது நாலாவதும் முக்கியமானதுமான அம்சம். ‘சுக்ராம் பிராமணர். அவர் அப்போது மட்டும் ஊழலில் ஈடுபட்டிருக்கலாம்; மேல் சாதிக்காரர்கள் ஊழலே செய்ய மாட்டார்கள்; ஆ. ராசா பட்டியல் இனத்தவர். அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்களால் பதவியையும் பொறுப்பையும் வகிக்க முடியாது, வழக்கமாகவே சந்தேகத்துக்குரியவர்கள்’ என்பதே பொதுப்புத்தியாக இருக்கிறது!

இனி, பாஜகவுக்குள் இரு வேறு ஊழல் சம்பவங்கள் எப்படிக் கையாளப்பட்டன என்று ஆராய்வோம். அக் கட்சியின் இரு வேறு மூத்த தலைவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோது அரசின் மூலம் ‘எதையோ செய்து தருவதற்காக’, மறைத்துவைக்கப்பட்ட கேமரா எதிரில் லஞ்சம் வாங்கினார்கள். 2003-ல் திலீப் சிங் ஜுதேவ் ரூ.9 லட்சம் வாங்கினார். அந்த விவகாரம் வெளியான பிறகும் அவருக்குக் கட்சியில் மறுவாழ்வு தந்து மீண்டும் தேர்தலில் நிறுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் கூட இடம் பெற்றுவிட்டார்.

இன்னொருவர் பங்காரு லட்சுமண். 2001-ல் ‘தெஹல்கா’ நிறுவன ஏற்பாட்டில், ஒரு செயலுக்குப் பரிந்துரை செய்வதற்காக ஒரு லட்ச ரூபாயை கேமரா எதிரில் வாங்கிக்கொண்டார். ஜுதேவ் இளைய அமைச்சர் என்றால் பங்காரு லட்சுமண் கட்சியின் தேசிய தலைவர். அத்துடன் அவர் தலித். கட்சி அவரைப் பதவியிலிருந்து இறக்கியது, அவரைத் தனிமைப்படுத்தியது. சிறைக்கு சென்ற பங்காரு லட்சுமண் தன் மீதான ஊழல் வழக்கை தனியாக எதிர்த்துப் போராடி இறந்தும்விட்டார்.

ஜுதேவை ஆதரித்த கட்சி, பங்காரு லட்சுமணை ‘தீண்டத்தகாதவராகவே’ நடத்தியது. அதுதான் ஊழலுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு அல்லது வித்தியாசம்!

சாதி, நிறப் பாகுபாடு நிச்சயம் தொடர்கிறது; தண்டனை விதிக்கப்பட்டாலும் சுக் ராம் என்ற பிராமணரால் சிறைக்குப் போகாமலேயே தப்ப முடிகிறது; வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் ஆ.ராசாவைத் திருடனாகவே பார்க்கும் கண்ணோட்டம் தொடர்கிறது. ஜுதேவ் மறுவாழ்வு பெறுகிறார், பங்காரு லட்சுமண் விலக்கப்பட்டு, சாகவிடப்படுகிறார். இத்தகைய ‘இருட்டு சிந்தனைகளோடு’ உங்களுடைய விடுமுறை நாள்களைப் பாழ்படுத்துவதற்காக வருந்துகிறேன்; ஆனால் யதார்த்தம் என்ன என்பதை ஒப்பிட இதைவிடச் சிறந்த நேரம் வேறு இல்லை.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x