Published : 15 Sep 2023 03:22 PM
Last Updated : 15 Sep 2023 03:22 PM

“நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்?” - மத்திய அமைச்சர் கேள்வி

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

துடு (ராஜஸ்தான்): “ நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் ஏன் அச்சம் கொள்கிறது?” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்.18 முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. வரும் 17-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட இந்தச் சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில், ‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில், அரசியல் சாசன நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெறும். குறிப்பாக, நாடாளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், படிப்பினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்’ என்று கூறப்பட்டது. இதுதவிர, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிநிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா இந்தக் கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு எதையோ மறைக்கிறது என கூறிய காங்கிரஸ் கட்சி, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நேரத்தில் கட்டவிழ்த்து விடுவதற்கு பெரிய 'வெடிகுண்டை' அரசு வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தின் அழுத்தம் காரணமாக, செப்.18ம் தேதி தொடங்க உள்ள 5 நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை மோடி தலைமையிலான அரசு அறிவித்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் பெரிதாக ஒன்றும் இல்லை. இவை அனைத்தும் நவம்பரில் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்காலாம். வழக்கம் போல கடைசி நேரத்தில் அரசு, நாடாளுமன்றத்தில் வெடிகுண்டைத் தூக்கிப் போடலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ''நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை வெளியிடுவதற்கு மட்டுமே விதி உள்ளது. நாடாளுமன்றம் கூட்டப்படும்போது அதற்கான திட்டம் வெளியிடப்படுவதில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலோ அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலோ பகிரப்படும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இதேதான் நடந்தது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு பயம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x