Last Updated : 22 Dec, 2017 10:05 AM

 

Published : 22 Dec 2017 10:05 AM
Last Updated : 22 Dec 2017 10:05 AM

2ஜி நீதிமன்ற செய்தித் துளிகள்: திமுகவினரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ராசா

டெல்லியின் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி நேற்று காலை 9 மணிக்கே வந்து சேர்ந்தார். 10 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த தீர்ப்பு 11 மணிக்கு வழங்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில்திமுகவினர், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததே இதற்கு காரணம்.

கருப்பு-சிவப்பில் கனிமொழி

கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் முதலாவதாக 9.38-க்கு நீதிமன்றம் வந்தார். அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி, ஹெலன் டேவிட்சன், முன்னாள் தமிழக அமைச்சர் தமிழரசி மற்றும் விஜயா தாயன்பன் வந்திருந்தனர். ராசாத்தி அம்மாளை தொடர்ந்து, கனிமொழி, கலைஞர் டிவி சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்தனர். கனிமொழி, கருப்பு-சிவப்பு கலந்த சேலை அணிந்திருந்தார். அவருடன் கணவர் ஜி.அரவிந்தன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோரும் வந்தனர்.

முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், பொன்முடி, கன்னியாகுமரி எம்எல்ஏ மனோதங்கராஜ் உள்ளிட்ட பலரும் நீதிமன்றம் வந்திருந்தனர்.

வாழ்த்து பதாகைகள்

கடைசியாக 9.45-க்கு ஆ.ராசா வந்தார். அவர் வெள்ளை பேன்ட், சட்டை அணிந்திருந்தார். இவர்களுக்கு முன்னதாகவே நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் கட்சிக் கொடியுடன் கூடியிருந்தனர். ஆ.ராசாவை வாழ்த்தி சிறிய பதாகைகளும் எடுத்து வந்தனர்.

தீர்ப்பு வெளியானதும் புன்னகை பூத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கனிமொழி. நீதிமன்றத்துக்கு உள்ளேயே கட்சியினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

சற்று தள்ளி நின்றிருந்த ராசா, தீர்ப்பைக் கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தார். தன்னைச் சுற்றியிருந்த மற்றும் வாழ்த்து கூறிய திமுகவினரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.

தீர்ப்புக்கு பிறகு நீதிமன்ற அறையிலேயே திமுகவினர் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுகவினர் உற்சாகம்

நீதிமன்ற வளாகத்தில் உற்சாக முழக்கம் எழுப்பினர். பதாகைகளையும் காண்பித்தனர்.

நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அதிகமான கூட்டம் இருந்ததால் ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள் உட்பட பலரும் வெளியே வருவதற்கு நீண்ட நேரம் ஆனது.

நெரிசலால் தள்ளுமுள்ளு

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, படி இறங்கிய கனிமொழி நெரிசலில் சிக்கிக்கொண்டார். கணவர் அரவிந்தன்தான் அவரைத் தாங்கிப் பிடித்து வாகனம் வரை அழைத்து வந்தார். கூட்ட நெரிசலால் சுமார் ஒரு மணி நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி டெல்லி போலீஸாருக்கு சவாலாக இருந்தது. நீதிமன்ற வளாகத்தின் வாசலில் திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

ஆவணங்களில் கையெழுத்து

தீர்ப்புக்கு பிறகு வீடு திரும்பிய கனிமொழி மீண்டும் நீதிமன்றத்துக்கு டி.ஆர்.பாலுவுடன் வந்தார். சில ஆவணங்களில் அவர் கையெழுத்திட வந்ததாக கூறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x