Published : 16 Dec 2017 02:23 PM
Last Updated : 16 Dec 2017 02:23 PM

சவால்களை அன்போடும் பாசத்தோடும் எதிர்கொள்வோம்: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரை

எங்கள் முன்னால் எத்தகைய சவால் எழுந்தாலும் அதை அன்போடும் பாசத்தோடும் எதிர்கொள்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்றபின் தனது முதல் உரையில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த 6-வது நபர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக அவர் முதன்முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:

பெரும்பாலான இந்தியர்களைப் போலவே நானும் கொள்கை பிடிப்புடையவனே. ஆனால், இன்று நாம் காணும் அரசியல் களம் நம்மை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது.

அரசியல் என்பது மக்களின் உடைமை. இப்போது அது அப்படியானதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது எதிர்க்கத் துணிகிறீர்களோ அப்போது நீங்கள் தாக்குதலுக்கு

உள்ளாக்கப்படுவீர்கள். உங்களை பலவீனப்படுத்த பொய்யுரைப்பர், பிரச்சினைகளை திசை திருப்புவர்.

காங்கிரஸ் கட்சி நாட்டை 21-ம் நூற்றாண்டை நோக்கி முன்னெடுத்துச் சென்றது. ஆனால், நம் பிரதமரோ நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

இங்கே ஒரே ஒருவரின் குரல்தான் அர்த்தமுள்ளது; அந்தக் குரலுக்கு அத்தனை பேரும் கீழ்ப்படியவேண்டும். இப்படித்தான் நாம் இன்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

ஒரு தனிநபரை வலுவானவராக்க தேசத்தின் வெளியுறவு கொள்கைகள் சுக்குநூறாகிக்கிடக்கின்றன.

அவர்கள் காங்கிரஸை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள். நாம் பின்வாங்கினால் மட்டுமே அது முடியும். அவர்களை எதிர்த்து நில்லுங்கள்.

இந்தியர் ஒவ்வொருவரின் குரலாகவும் நாம் இருப்போம். இந்திய மக்களின் குரலை நசுக்க விடமாட்டோம் என நாம் சூளுரைப்போம். இந்தியர்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கும் கருவியாக காங்கிரஸ் உருவாக வேண்டும் என நான் விரும்புகிறேன்.

இப்போது நான் இந்தியில் பேச விரும்புகிறேன். (இவ்வாறு ராகுல் அறிவித்தவுடன் அதுவரை அமைதியாக இருந்த பார்வையாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்)தீ பற்றிக்கொண்டு கொழுந்துவிடத் தொடங்கினால் அதை அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்த முடியாது. இதைத்தான் பாஜகவுக்கு நாம் புரியவைக்க விரும்புகிறோம்.(விழா அரங்குக்கு வெளியே வெடித்துச் சிதறிய பட்டாசுகளை சுட்டிக்காட்டி ராகுல் இவ்வாறு சொன்னார்)

காங்கிரஸ்காரர்கள் அனைவரும் என் குடும்பத்தினர் என்பதை ஒவ்வொரு காங்கிரஸ்காரரிடமும் நான் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் கருணையும் கொண்ட இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் திரண்டுவர வேண்டும். நீங்கள் எழுப்பும் குரலைப் பாதுகாப்பதே ஒரு தலைவராக எனது கடமை.

(மீண்டும் ஆங்கிலத்தில்) காங்கிரஸ் என்பது பழம்பெரும் கருத்தாக்கம். ஆனால், பாஜகவோ தங்களது சித்தாந்தமே பழமையானது என நிரூபிக்கத் துடிக்கிறது. கொள்கை வேறுபாடு இருந்தாலும்கூட பாஜகவை காங்கிரஸின் சகோதர சகோதரியாகவே கருதுகிறோம். வெறுப்பை வெறுப்பால் முறியடிக்க விரும்பவில்லை.

அவர்கள் குரல்களை நசுக்குகின்றனர்; ஆனால் நாங்கள் நலிவுற்ற குரல்கள் சேர்ந்திசைக்க வழிசெய்கிறோம். காங்கிரஸ் இதற்கு முன்னரும் சரி, இனியும் சரி.. சவால்களை அன்போடும் கருணையோடும் எதிர்கொள்ளும்.

உச்சபட்ச பணிவுடன் நான் இப்பதவியை ஏற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x