Published : 21 Aug 2023 07:01 AM
Last Updated : 21 Aug 2023 07:01 AM
லே: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் கயாரி பகுதியில் இந்திய ராணுவத்தின் பிராந்திய தலைமையகம் அமைந்துள்ளது. லடாக் தலைநகர் லே பகுதியில் இருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ள கயாரிக்கு நேற்று முன்தினம் 5 வாகனங்களில் 34 ராணுவ வீரர்கள் புறப்பட்டனர். ராணுவ வாகனங்கள் கயாரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள நயோமா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாகனம் நிலைதடுமாறி 60 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் 10 வீரர்கள் பயணம் செய்தனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஒருவர் படுகாயம்: இதர வாகனங்களில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 9 வீரர்களின் சடலங்கள்மீட்கப்பட்டன. படுகாயமடைந்த வீரர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், “லடாக் சாலை விபத்தில்உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த வீரர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “லே அருகே நேரிட்ட விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய உயரிய சேவை எப்போதும் நினைவில் கொள்ளப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த வீரர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT