Published : 16 Aug 2023 11:53 AM
Last Updated : 16 Aug 2023 11:53 AM

“அது மணீஷையும் மகிழ்விக்கும்” - பிறந்தநாளில் கட்சி சகாவை நினைவுகூர்ந்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா | கோப்புப்படம்

புதுடெல்லி: தனது பிறந்தநாளான இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைப் பிரிந்துவாடுவதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆக.16-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது கட்சி சகாவும், டெல்லியின் முன்னாள் கல்வி அமைச்சரான மணீஷ் சிசோடியாவை ‘மிஸ்’ செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில்,"இன்று எனது பிறந்தநாள். பலர் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி. ஆனால் மணீஷ் சிசோடியாவை நான் மிகவும் ‘மிஸ்’ செய்கிறேன். பொய்யான குற்றச்சாட்டுக்காக அவர் சிறையில் இருக்கிறார்.

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வோம் என்று உறுதியெடுப்போம். அது வலிமையான இந்தியாவுக்கு அடித்தளமாக அமையும். அது இந்தியாவை நம்பர்.1 ஆக்கும் நமது கனவு நினைவாக உதவும். அது மணீஷையும் மகிழ்ச்சி அடையச் செய்யும்" இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் பிறந்தநாளைக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,"டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனைகள்" என்று தெரிவித்துள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், "

மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களின் இந்த ஆண்டு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக திகழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x