Last Updated : 16 Aug, 2023 09:49 AM

2  

Published : 16 Aug 2023 09:49 AM
Last Updated : 16 Aug 2023 09:49 AM

டெல்லியில் என்டிஏ கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் பயிற்சிப் பட்டறை: தென் மாநிலங்களில் ’இண்டியா’வை எதிர்க்க ‘வார் ரூம்’

புதுடெல்லி: டெல்லியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்களுக்கானப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சிகளின் ’இண்டியா’வை மக்களவைத் தேர்தலில் சமாளிக்க தென் மாநிலங்களில் ‘வார் ரூம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராவதுடன் அதன் தலைமையிலான என்டிஏ கட்சிகளையும் தயார்படுத்துவதில் இறங்கி உள்ளது. இதற்காக, என்டிஏ உறுப்பினர்களின் எம்பி.,க்களை நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதையடுத்து, என்டிஏ உறுப்பினர்களின் செய்தித் தொடர்பாளர்களையும் அழைத்து ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான இப்பட்டறை, நாடாளுமன்ற துணைக்கட்டிடத்தின் அரங்கில் கடந்த ஆகஸ்ட் 11 -ல் நடைபெற்றிருப்பது தெரிந்துள்ளது.

பாஜகவின் தேசியத் தலைவர்கள் ஜே.பி.நட்டா, ரவிசங்கர் பிரசாத் இதில் பேசினர். மத்திய அமைச்சர்களில் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ் ஆகியோரும், கூட்டணிக் கட்சிகளில் தமிழ் மாநிலக் காங்கிரஸின் ஜி.கே.வாசன் மற்றும் லோக் ஜன சக்தியின்(எல்ஜேபி) சிராக் பாஸ்வான் ஆகியோர் பயிற்சி அளித்து பேசினர்.

தமிழகக் கூட்டணிகளில் அதிமுகவின் வைகைச் செல்வன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மகனான ஷியாம் கிருஷ்ணசாமி, ஐஜேகேவிலிருந்து அதன் தலைவரின் உறவினரான ஜெயசீலன், புதிய நீதிக்கட்சி ஜெகதீசன், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சார்பில் சுதிர் சங்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இப்பட்டறையில், மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க வியூகங்கள் அமைக்கப்பட்டன. எதிர்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவை எதிர்கொள்ள தமிழகத்தில் ‘வார் ரூம்’ அமைக்க வேண்டும் என அதிமுக சார்பில் அதன் செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் அளித்த யோசனை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

இந்த வார்ரூம் மூலம், தேர்தல் விமர்சனங்களை சமாளிக்கவும், உத்திகளை வகுக்கவும் என்டிஏ உறுப்பினர்களுடன் ஒரு குழு அமைத்து எதிர்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவின் ஆறு மாநிலங்களிலும் அமைப்பது எனவும் முடிவாகி உள்ளது.

இந்த பயிற்சிப் பட்டறையில் தமிழகம் குறித்து பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், ‘மக்களவை தேர்தலில் தேசியம், பிராந்தியம், மாநிலம் என மூன்றுவிதமான அரசியல் செய்ய வேண்டும்.

இவற்றை ஒன்றுடன் ஒன்றை சேர்க்காமல் அம்மூன்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி எதிர்க்கட்சிகளை பேசி சமாளிக்க வேண்டும். உதாரணமாக, பாஜக மீது இந்துத்துவா பழி சுமத்தும் திமுகவை உலகின் பழமையான தமிழ்மொழிக்கு பிரதமர் அளித்துவரும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறலாம்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் தமிழ் மொழியின் பெருமையை அவர் பேசுகிறார். பிரான்சில் திருவள்ளுவர் சிலை வைப்பதாக அறிவித்துள்ளார். காசி மற்றும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமங்களை எடுத்துரைக்கலாம். மத்திய அரசின் திட்டங்களை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

இதே கூட்டத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ‘எதிர்கட்சிகளுக்கு மணிப்பூரைப் பற்றி பேச சிறிதும் அருகதையில்லை. ஏனெனில், காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

இங்கு பல ஆண்டுகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின் இரோம் சர்மிளா முதலாவதாக கொடைக்கானலுக்கு வந்து தங்கியிருந்தார். இவரை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கண்டுகொள்ளவே இல்லை.’ எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற பயிற்சிப் பட்டறையை மக்களவை தேர்தல் வரை, ஒவ்வொரு மாதமும் கானொளிக் காட்சி மூலம் பாஜக நடத்த முடிவு செய்துள்ளது. அடுத்த கூட்டம் மட்டும் சென்னையில் அதிமுக தலைமையில் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x