Published : 16 Aug 2023 10:59 AM
Last Updated : 16 Aug 2023 10:59 AM

நிலவை நெருங்கும் சந்திரயான்: 4-வது முறையாக சுற்றுப்பாதையின் உயரம் குறைப்பு

படம்: இஸ்ரோ

சென்னை: சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நான்காவது முறையாக நிலவின் சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நுழைந்து, பயணத்தை தொடங்கியது. படிப்படியாக சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 153x163 கி.மீ என சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நாளை (ஆக.17) விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்படுகிறது. வரும் 23-ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் லேண்டர் தரையிறங்க உள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன.

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் பயணித்து வருகிறது. வரும் 23-ம் தேதி சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட உள்ளது.

“சந்திரனை நோக்கிய சந்திரயான்-3 பயணத்தில் ஒரு படி மேலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இலக்கின் படி சந்திரயான்-3 153x163 கி.மீ என சுற்றுப்பாதையில் தற்போது பயணித்து வருகிறது” என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x