Last Updated : 24 Nov, 2017 09:32 AM

 

Published : 24 Nov 2017 09:32 AM
Last Updated : 24 Nov 2017 09:32 AM

பிரதமர் அலுவலக பெயரில் போலி இ-மெயில் விசாரணை தொடங்கியது சிபிஐ

பிரதமர் அலுவலகத்தின் பெயரில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மருத்துவருக்கு போலி இ-மெயில் அனுப்பப்பட்டது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு காப்பீட்டுத் தொகை பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. லூதியானா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நிஷா ஜெயின் என்ற பெண் மருத்துவர் இந்தப் பரிசோதனை நடத்தி அவரிடம் அறிக்கை அளித்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு, நிஷா ஜெயின் தவறான மருத்துவ அறிக்கை அளித்துள்ளதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மருத்துவமனையின் தலைமை நிர்வாகிக்கு இ-மெயில் வந்துள்ளது.

இந்த இ-மெயில் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அதன் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய, அதனைப் பிரதமர் அலுவலகத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அனுப்பியது. இதில் அந்த இ-மெயில் போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து இதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐ-க்கு பிரதமர் அலுவலக இணை இயக்குநர் பி.கே.இஸார் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முகவரி கண்டுபிடிப்பு

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சிபிஐ வட்டாரத்தில் கூறும்போது “pmoffice96@gmail.com என்ற முகவரியில் இருந்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெயர் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். மருத்துவ அறிக்கை பெற்றவர் தரப்பில் அவருக்கு சாதகமான அறிக்கை தரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவர் அவ்வாறு தரவில்லை. இதனால் ஏற்பட்ட காப்பீட்டுத் தொகை இழப்புக்காக இந்த இ-மெயில் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

போலி இணையதளம்

பிரதமர் அலுவலக உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது இது முதல்முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மத்திய விவசாயத் துறை பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் சார்பில் விவசாயிகள் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் ரொக்கம் பெற்று மோசடி நடைபெற்றது. இதுதொடர்பாக டெல்லி போலீஸாருக்கு அனுப்பப்பட்ட வழக்கு, பிறகு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x