Published : 31 Jul 2023 04:58 AM
Last Updated : 31 Jul 2023 04:58 AM

வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்’ இயக்கத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்' இயக்கம் தொடங்கப்படும். இதன்படி, அவரவர் பகுதியில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி செல்ஃபி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று ஒலிபரப்பான 103-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நேரிட்டன. இந்த பேரிடர்களை பொதுமக்களும் மீட்பு படையினரும் திறம்பட எதிர்கொண்டனர். பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு மக்களே முன்வந்து உதவி செய்தனர். இதுதான் இந்தியாவின் பலம்.

மத்திய அரசின் முயற்சியால் நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை உருவாக்கும் பணிநடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தின் பகரியா கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுமார் 100 குளங்களை சீரமைத்துள்ளனர். மழைக் காலத்தில் இந்த குளங்கள் நிறைந்து, சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அப்பகுதி பெண்கள் அடுத்தகட்டமாக 800 குளங்களை மீட்டெடுக்க உறுதிபூண்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய மாநில அரசையும், மக்களையும் மனதார பாராட்டுகிறேன்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த 2 பேர், சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதுதான் இந்தியாவின் சிறப்பு.

100 வயது யோகா ஆசிரியர்: சமீபத்தில் பிரான்ஸுக்கு சென்றபோது, அந்த நாட்டை சேர்ந்த ஷார்லோட் ஷோபாவை சந்தித்தேன். 100 வயதை தாண்டிய அவர்யோகா ஆசிரியர். கடந்த 40 ஆண்டுகளாக பிரான்ஸ் மக்களுக்கு யோகா கற்பித்து வருகிறார்.

அவரைப்போல, யோகா உள்ளிட்ட நமது பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

சோழர் கால சிலைகள் மீட்பு: தமிழகத்தின் சோழர் கால சிலைகள் உட்பட இந்தியாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பண்டைய கலை படைப்புகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அதில், தேவி, முருகப் பெருமான் சிலைகள் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. ஆயிரம் ஆண்டு பழமையான விநாயகரின் வெண்கல சிலையும் நாடு திரும்பியிருக்கிறது. பாற்கடல் கடைதல் நிகழ்வை முன்னிறுத்தும் தென்னிந்திய மரப் பலகை 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. விலைமதிப்பற்ற நம் சொத்துகளை திருப்பி அளித்த அமெரிக்க அரசுக்கு நன்றி.

நாடு முழுவதும் பெருமளில் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் அழிக்கப்பட்டன. போதை பொருட்கள் ஒழிப்பு இயக்கத்தை அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோல் அருகே உள்ள பிசார்புர் கிராமம் ஒரு காலத்தில் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தது. தேசிய கால்பந்து வீரர் ரயீஸ் அஹ்மத் முயற்சியால் தற்போது பிசார்புரில் இருந்து தேசிய, மாநில அளவில் 40-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் உருவாகி உள்ளனர்.

என் மண், என் தேசம் இயக்கம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் ‘என் மண் என் தேசம்' என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண்நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும்.

தேசத்தை வளர்ந்த நாடாக்கும் இலக்கு, அடிமைத்தனத்தை வேரறுப்பது, பாரம்பரிய பெருமிதம், ஒற்றுமையின் பலம், கடமையை நிறைவேற்றுதல் என அடுத்த 25 ஆண்டுகளுக்கான 5 உறுதிமொழிகள் குறித்து கடந்த சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசினேன். ‘என் மண், என் தேசம்' இயக்கத்தில் பங்கேற்கும் அனைவரும் இதை சபதமாக ஏற்க வேண்டும். தேசத்தின் புனித மண்ணை கைகளில் ஏந்தி சபதம் ஏற்கும்போது செல்ஃபி புகைப்படம் எடுத்து yuva.gov.in இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டுபோல இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை ஒட்டி வீடுகள்தோறும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் கனவுகளை நனவாக்க இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஆண் துணையின்றி ஹஜ் பயணம்: முஸ்லிம் பெண்களுக்கு பாராட்டு

‘மனதின் குரல்’ தொடர்பாக வந்திருக்கும் பல கடிதங்கள், குறிப்பாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட முஸ்லிம் பெண்கள் எழுதியுள்ள கடிதங்கள் மிகுந்த மனநிறைவை அளிக்கின்றன. இந்த பெண்கள் தங்களது ஹஜ் புனிதப் பயணத்தை, ஆண் துணை இல்லாமல் நிறைவு செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள், ஆண் துணை இல்லாமல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது 4,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள், ஆண் துணையின்றி ஹஜ் புனிதப் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். இது மிகப்பெரிய மாற்றமாகும். இதற்கு ஒத்துழைப்பு அளித்த சவுதி அரேபிய அரசுக்கு ‘மனதின் குரல்’ வாயிலாக நன்றி தெரிவிக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக ஹஜ் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்கள் பாராட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கடிதங்கள் வாயிலாக எனக்கு நல்லாசி வழங்கி வருகின்றனர். இது உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x