Published : 16 Nov 2017 09:38 AM
Last Updated : 16 Nov 2017 09:38 AM

ஆபாச வீடியோ வெளியிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை: படேல் இட ஒதுக்கீடு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் ஆவேசம்

‘‘என்னை வழிக்குக் கொண்டுவர பாஜக முயற்சி செய்தது. அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆபாச வீடியோ விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என்று ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் படேல் இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரி படிடார் அனாமத் அந்தோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் தலைமையில் பெரும் போராட்டம் நடந்தது. அதன்பின் குஜராத்தில் ஆளும் பாஜக.வுக்கு கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கினார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வை தோற்கடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியும் ஹர்திக் படேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், ஒரு பெண்ணுடன் ஹர்திக் மிக நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது, ஹர்திக் மற்றும் நண்பர்களுடன் மது அருந்துவது போன்ற 4 வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியுள்ளன.

இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தின்போது போலீஸ் நடவடிக்கையில் சிலர் இறந்தனர். அந்த சம்பவத்தில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, ஹர்திக் உட்பட 51 பேர் தங்கள் தலையை மொட்டையடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மறுநாளே, படிடார் இளம் தலைவர்கள், ஹர்திக் ஆகியோர் ஒரு பெண்ணுடன் இருப்பது போலவும் அவர்கள் மது அருந்துவது போலவும் 4 வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோ உண்மையானதா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஹர்திக் படேல் நேற்று கூறியதாவது:

எனது தனிப்பட்ட விவகாரங்களில் பாஜக அத்துமீறி நடந்து கொள்கிறது. கடந்த 22 ஆண்டாக குஜராத்தில் பாஜக அரசு மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் எதுவும் செய்யவில்லை என்பது அம்பலமாகி விட்டது. அதனால், 23 வயது பையனைப் பற்றி (ஹர்திக்) பாஜக இல்லாத செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆபாச சிடிக்கள் குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

ஒருவரின் தனிப்பட்ட நடத்தையை இழிவுப்படுத்துவதால், படேல் இனத்தவர்களின் போராட்டம் பாதிக்கப்படாது. நான் கெட்டவனாக இருந்தாலும் கூட, இடஒதுக்கீட்டுக்கான எங்கள் போராட்டம் ஓய்ந்து விடாது. இவ்வாறு ஹர்திக் கூறினார்.

ஆனால், ஹர்திக்கின் முன்னாள் நெருங்கிய நண்பர் சிராக் படேல் கூறும்போது, ‘‘ஆபாச வீடியோக்கள் வெளியான பிறகு, அவர் மீதான நம்பகத்தன்மை படேல் இன மக்களிடம் இருந்து போய்விடும். இனிமேல் அவருடைய போராட்டங்களில் பெண்கள் பங்கேற்காமல் விலகிவிடுவார்கள். பாஜக சதி என்று ஹர்திக் கூறுவதை படேல் இனத்தவர்கள் நம்ப மாட்டார்கள்’’ என்று விமர்சித்துள்ளார்.

ஹர்திக்கின் இன்னொரு முன்னாள் நெருங்கிய நண்பர் கேதன் படேல் கூறும்போது, “ஆபாச வீடியோவில் ஹர்திக் இருப்பது தெளிவாக உள்ளது. தவறை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். படேல் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் இருந்து அவர் விலக வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x