Published : 25 Jul 2023 02:38 PM
Last Updated : 25 Jul 2023 02:38 PM

“நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி!” - ராகுல் பதிலடி

ராகுல் காந்தி, நரேந்திர மோடி

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தின் வாயிலாக அழுத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

இது தொடர்பாக அவர் இட்ட பதிவில், "நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. ஆனால், நாங்கள் இண்டியா தான். நாங்கள் மணிப்பூரின் காயங்கள் ஆற உதவுவோம். நாங்கள் மணிப்பூர் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைப்போம். நாங்கள் மணிப்பூரின் அனைத்து மக்களுக்கும் அன்பையும், சமாதானத்தையும் மீட்டுக் கொடுப்போம். இந்தியா என்பதன் கருத்தியலை நாங்கள் மணிப்பூரில் மீள்கட்டமைப்போம்" என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023

பிரதமர் பேசியது என்ன? - முன்னதாக பிரதமர் மோடி பாஜக எம்.பி.க்கள் மத்தியில் (INDIA) இண்டியா கூட்டணி பெயர் பற்றி கூறுகையில், "இந்தியா என்ற பெயரை இன்று பலரும் பயன்படுத்துகின்றனர். இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் இருக்கும் இந்தியாவைப் போலத்தான் இந்திய தேசிய காங்கிரஸிலும் இருந்தது. இந்தியா என்ற வார்த்தையை மட்டுமே சேர்ப்பதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.

இதுபோன்ற இலக்கற்ற ஒரு கூட்டணியை நான் பார்த்ததில்லை. இந்தக் கூட்டணியைப் பார்க்கும்போது அவர்கள் எதிர்க்கட்சியாகவே நிறைய காலம் இருக்க முடிவு செய்துவிட்டார்கள் போல் தோன்றுகிறது. அதுதான் அவர்களின் விதியும்கூட. இப்போதைய ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு இருக்கிறது. மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள நாம் புதிதாக எல்லாவற்றையும் ஆரம்பிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

அவரது பேச்சை வரவேற்றுப் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "நாங்கள் பிரதமர் மோடியை நினைத்துப் பெருமிதம் கொள்கிறோம். 2024 மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. பிரதமர் சுட்டிக் காட்டியதுபோல் இந்தியா என்ற பெயர் பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒன்றின் முக மதிப்பும் அதன் உண்மையான மதிப்பும் வெவ்வேறு. அப்படித்தான் இந்த ‘இண்டியா’வின் மதிப்பும்" என்று கூறினார்.

பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் தொடங்கி பல மூத்த தலைவர்கள் வரை பலரும் இண்டியா கூட்டணி பெயரை விமர்சிக்க, தற்போது ராகுல் காந்தி அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x