Last Updated : 16 Nov, 2017 05:01 PM

 

Published : 16 Nov 2017 05:01 PM
Last Updated : 16 Nov 2017 05:01 PM

கோட்சேவுக்கு கோயில் கட்டுகிறது இந்து மகா சபை

 

இந்து மகா சபை, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு குவாலியரில் உள்ள தங்களது அலுவலகத்திலேயே கோயில் கட்டுகிறது. இதற்கான அடிக்கல் நவ. 15 அன்று நாட்டப்பட்டது.

இந்த செய்தியை இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், ''மாவட்ட நிர்வாகத்திடம் கோட்சேவுக்குக் கோயில் கட்ட கடந்த நவம்பர் 9-ம் தேதி அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதால் இந்து மகா சபை அலுவலகம் வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே கோயில் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. முதல்கட்டமாக குவாலியர் நகரின் டெளலத்கஞ்ச் பகுதியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் கோட்சேவின் 32 அங்குல உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான இந்து வழிபாடுகளுடன் சிலைக்கு ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.

அவரின் அஸ்தி இன்னும் புனேவில் வைக்கப்பட்டுள்ளது. அகண்ட பாரதத்தை அமைக்க வேண்டும் என்னும் அவரின் ஆசை நிறைவேறும்போதுதான் அஸ்தியைக் கரைக்க முடியும்'' என்றார்.

காந்தியைக் கொன்ற வழக்கில் கோட்சேவுக்கு மரண தண்டணை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அம்பாலா சிறையில் நவம்பர் 15-ம் தேதி 1949-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இதனால் நவ.15-ம் தேதியை இந்து மகாசபையினர் 'தியாக தினமாக' அனுசரிக்கின்றனர்.

இதனாலேயே நேற்று கோட்சே கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''கோயில் கட்டப்படுவது குறித்து குவாலியர் எஸ்பி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று முடிவெடுப்பார்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x