Published : 08 Jul 2023 04:35 AM
Last Updated : 08 Jul 2023 04:35 AM

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர் நீதிமன்றம்

அகமதாபாத்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்வார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டில் கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி?’’ என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சூரத் நீதிமன்றத்தில் வழக்கு: இதையடுத்து, மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராகுலின் எம்.பி.பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார்.

அவருக்கு ஜாமீன் வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

பின்னர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். கடந்த மேமாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவருக்கு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே என்றுதெரிவித்துள்ளது.

நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தனது தீர்ப்பில் கூறியதாவது: நாடு முழுவதும் ராகுல் காந்திமீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.புனே நீதிமன்றத்தில் சாவர்க்கர் பேரன் தொடுத்துள்ள மனுவும் நிலுவையில் உள்ளது. இவற்றைஎல்லாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

தீர்ப்பில் தலையிட முடியாது: ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியானதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், இந்த வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிப்பது என்பது சரியானது, சட்டபூர்வமானதும்கூட.

2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கேட்ட மனுதாரர், அதற்குஉரிய காரணங்களை குறிப்பிடவில்லை. அவர் தெரிவித்துள்ள காரணங்களை நீதிமன்றம் ஏற்க இயலாது. எனவே, அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டை சூரத் செஷன்ஸ் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்வார் என்று தெரிகிறது.

பிரியங்கா குற்றச்சாட்டு: இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ராகுல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.

எங்கள் யுத்தம் இன்னும் முடியவில்லை. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுநினைத்து ராகுல் போராடி வருகிறார். ஆனால், மக்கள் நலன் என்ற கேள்வியே எழக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது.

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் நலன், மகளிர் உரிமை, தொழிலாளர் பிரச்சினை என்று எதையுமே, யாருமே பேசக்கூடாது என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு நினைக்கிறது.

போராட்டங்களுக்கு தயார்: உண்மை, சத்தியாகிரகம், மக்கள் சக்தி முன்பு அதிகார திமிர் ஒருபோதும் நிலைக்காது. மக்களின் நலன் தொடர்பான கேள்விகளை கேட்டு ஒரு போராட்டத்தை, ராகுல் காந்தி தொடங்கி வைத்துள்ளார். இதை தடுத்து நிறுத்த முடியாது.

ராகுலின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக அரசின் தந்திரங்களை கையாள நாங்கள் தயார். உண்மையான தேசபக்தனாக அனைத்து விதமான போராட்டங்களுக்கும் ராகுல் காந்தி தயாராக உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x