Published : 06 Jun 2023 04:02 AM
Last Updated : 06 Jun 2023 04:02 AM

ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் இரு பாதையிலும் ரயில் சேவை தொடங்கியது

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மின்வழித் தடம், தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, நேற்று ரயில் போக்குவரத்து தொடங்கியது. விபத்தில் உருக்குலைந்த பெட்டிகள் அருகில் கிடக்க, அப்பகுதியை கடந்து செல்லும் ரயில்கள். படம்: பிடிஐ

பாலசோர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் இரு பாதைகளிலும் நேற்று அதிகாலை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் பகுதியை கடக்கும்போது, சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் சில பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால், அப்போது எதிர் திசையில் வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,100 பேர் காயம் அடைந்தனர். விபத்தால் சுமார் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், மீட்பு பணிகள் முடிந்த பிறகு, விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு, மின்வழித்தடம் மற்றும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டது. பிறகு சரக்கு ரயிலும், அதைத் தொடர்ந்து பயணிகள் ரயிலும் இயக்கி பரிசோதிக்கப்பட்டன.

இந்நிலையில், அப்பகுதியில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஹவுரா – புரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் அந்த இடத்தை கடந்து சென்றன.

‘விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இரு பாதைகளும் ரயில் இயக்குவதற்கு ஏற்ற வகையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி இரவு 10.40 மணி மற்றும் நள்ளிரவு 12.05 மணிக்கு இரு பாதைகளிலும் அடுத்தடுத்து முதல் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து, இரு பாதைகளிலும் போக்குவரத்து தொடங்கியுள்ளது’ எனதென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அப்பகுதியை ரயில்கள் குறைந்த வேகத்தில், அதாவது 10 கி.மீ. வேகத்தில் மட்டுமே கடந்து செல்கின்றன. “ரயில் சேவை தொடங்கினாலும், அப்பகுதியில் தொடர்ந்து சீரமைப்பு பணி நடந்து வருகிறது. பணிகள் நடக்கும்போது ரயில்களின் வேகம் குறைக்கப்படுவது வழக்கமானதுதான். அப்பகுதியில் ரயில்களின் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்படும்” என்று அதிகாரிகள் கூறினர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஷாலிமாருக்கு 2 நாட்களுக்கு பிறகு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. வழக்கமாக காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 3 மணி 45 நிமிடம் தாமதமாக காலை 10.45 மணிக்கு புறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x