Published : 05 Jun 2023 07:14 PM
Last Updated : 05 Jun 2023 07:14 PM

Odisha Train Tragedy | விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் குடும்பத்தினரை கண்டறிவதில் ரயில்வே தீவிரம்

ரயில்வே அமைச்சர் | கோப்புப் படம்

பாலசோர்: விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் அரசு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட உடல்கள்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 170 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "170 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 85 உடல்கள் பாலசோர் மருத்துவமனையிலும், 85 உடல்கள் புபனேஸ்வர் மருத்துவமனையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒடிசா அரசு தனது சொந்த செலவில் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும். உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கூடிய விரைவில் அனுப்பிவைக்கப்படும். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள 1800-3450061/1929 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் srcodisha.nic.in என்ற இணையதளத்தில் அரசு சார்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலமும் அடையாளம் காண முயலலாம் என ஒடிசா அரசு தெரிவித்திருந்தது. ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள்: இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "விபத்து நிகழ்ந்த பகுதி நேற்று இரவு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் ரயில்கள் செல்லத் துவங்கி உள்ளன. தற்போது எங்களின் முக்கிய நோக்கம், ரயிலில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினரை கண்டறிவதுதான். அவர்கள் அரசு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் தொடர்பு கொண்டால்தான் எங்களால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 275 பேரில் 170 பேரின் உடல்கள் இன்று மாலை வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 105 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களின் உறவினர்கள் மூலம்தான் இந்த பணியை மேற்கொள்ள முடியும் என்பதால், ரயில்வே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

முன்னதாக, ஒடிசா அரசு வெளியிட்ட தகவல்: ரயில்வே நிர்வாகம் இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தாக தெரிவித்தது. அதனால் நாங்களும் அறிவித்தோம். ஆனாலும் எங்களின் பாலசோர் மாவட்டட ஆட்சியரும் இறந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்தார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 275 பேர் உயிரிழந்து இழந்திருந்தனர். சில நேரங்களில் ஒரே உடலை இரண்டு முறை எண்ணியிருக்கலாம்; அதனால் எண்ணிக்கை மாறியிருக்கலாம். மீட்புப் பணிகளும், மறுசீரமைப்பு பணிகளும் பொதுமக்களின் முன்னிலையிலேயே நடந்து வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எண்ணம் எங்கள் அரசுக்கு இல்லை. ஒடிசா அரசு வெளிப்படைத்தன்மை மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.

தற்போது நிலவும் வெப்பமான சூழ்நிலையில் உடல்கள் விரைவாக அழுகும் நிலையில் இருக்கின்றன. இதனால் சட்டப்படி, உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக மாநில அரசு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கும் என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, பத்திரிகையாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில் விபத்தில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்திருப்பதாகவும், 182 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x